விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

  தினத்தந்தி
விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணியா..? தொண்டர்களிடையே அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தற்போது தி.மு.க. கூட்டணியில் இருந்து வந்தாலும், காங்கிரஸ் அடிமட்ட தொண்டர்களில் பெரும்பாலானோர் மற்றுல் சில நிர்வாகிகள் நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் மேலிடத்துடன் உள்ள நெருக்கம் மற்றும் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்ற அறிவிப்பும் தான் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே இது போன்ற எண்ணத்தை ஊக்குவித்து உள்ளது. ஆனால், தற்போது பதவிகளில் இருக்கும் பலரும் தி.மு.க. கூட்டணி தொடர்ந்தால் போதும் என்ற நோக்கத்திலும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் பலம் எவ்வளவு அதிகரித்துள்ளது, தேர்தலை சந்திக்க எவ்வாறு தயாராகி வருகிறார்கள்.யாருடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அடங்கிய 12 பேர் கொண்ட குழு இன்னும் 2 வாரங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா..? இந்த சூழ்நிலையில், கடந்த 11-ந்தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு (எஸ்.ஐ.ஆர்.) எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் காமராஜர் உருவப்படம் இல்லை என்றும், ராகுல்காந்தியின் உருவப்படம் சிறிய அளவில் அச்சிடப்பட்டிருந்தது என்பதையும் காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் (சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்), பிரின்ஸ், தாரகை கத்பர்ட் ஆகியோரும் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்ததோடு காங்கிரஸ் சார்பில் வருகிற 17-ந்தேதி எஸ்.ஐ.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 12 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய இருப்பது காங்கிரஸ் கட்சி த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பை காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.

மூலக்கதை