கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

  தினத்தந்தி
கோவையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

கோவை,கோவை விமான நிலையம் அருகே இரவு நேரத்தில் 21 வயதான கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), அவருடைய தம்பி கார்த்தி என்ற காளீஸ்வரன் (20), தவசி (20) ஆகியோர் காதலனை அரிவாளால் வெட்டி, மாணவியை தூக்கிச்சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ், கார்த்தி, தவசி ஆகிய 3 பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில் காலில் படுகாயம் அடைந்த அவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியும், வெட்டுக்காயம் அடைந்த அவருடைய காதலனும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர்கள் 2 பேரும் குணமடைந்தனர். இதையடுத்து கல்லூரி மாணவி மற்றும் அவருடைய காதலன் ஆகியோர் தங்களின் வீடுகளுக்கு திரும்பினர். அதுபோன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தவசி, சதீஸ் ஆகியோர் குணமடைந்ததால் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்தி என்ற காளீஸ்வரனுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கல்லூரி மாணவி, அவருடைய காதலனுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கார்த்திக்கு சிகிச்சை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே அடையாள அணிவகுப்பு நடத்தப்படும். அதன்பிறகு 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்போம். இந்த வழக்கில் கைதான 3 பேருக்கும் கோவில்பாளையத்தில் நடந்த கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி விசாரித்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

மூலக்கதை