ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட்' பதிவிறக்கம் செய்ய மாற்று வசதி- தேர்வு வாரியம் நடவடிக்கை

  தினத்தந்தி
ஆசிரியர் தகுதித்தேர்வு ‘ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய மாற்று வசதி தேர்வு வாரியம் நடவடிக்கை

சென்னை, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியாற்றுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்ற சூழல் உருவாகிவிட்டது. அந்த வகையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் தாள்-1 தேர்வும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்காக விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ள தாள்-1 தேர்வுக்காக 1 லட்சத்து 7 ஆயிரத்து 370 பேரும், நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தாள்-2 தேர்வுக்காக 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ‘ஹால்டிக்கெட்' கடந்த 3-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், சிலர் கடவுச்சொல்லை (பாஸ்வேர்டு) மறந்து போனதால் ஹால்டிக்கெட்டை எடுப்பதற்கான நடைமுறையை பின்பற்றியும் அது சாத்தியம் இல்லாமல் போனதாகவும், இதனால் சிரமத்தை சந்திப்பதாகவும் ‘தினத்தந்தி'யில் தேர்வர்கள் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன. இதன் எதிரொலியாக, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள மாற்று வசதியை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் விண்ணப்பத்தின்போது பதிவு செய்த செல்போன் எண் அல்லது அப்ளிகேஷன் ஐ.டி. எண் அல்லது இ-மெயில் முகவரி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பதிவு செய்து, பிறந்த தேதியை பதிவிட்டால் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை