மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.. வாலிபர் செய்த கொடூரம்

  தினத்தந்தி
மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.. வாலிபர் செய்த கொடூரம்

பண்ருட்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 55). இந்த தம்பதிக்கு விஜய்(28), ஸ்ரீராம்(25) ஆகிய 2 மகன்கள் உண்டு. ராஜலட்சுமி, பண்ருட்டி பஸ் நிலையம் எதிரே கடலூர் சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் தொடர்ந்து கடையை நடத்த முடியவில்லை. இதில் பி.எஸ்சி. பட்டப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய விஜய், வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றியதோடு, மதுபோதைக்கு அடிமையானார். இதனால் மதுகுடிக்க பணம் கேட்டு தனது தாயாரிடம் விஜய் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். ஸ்ரீராம் மனவளர்ச்சி குன்றி இருந்தார். எனவே 2 மகன்களுடன் ராஜலட்சுமி, தனது வீட்டின் முதல் மாடியில் இருந்தார். அவரது மாமியார் மல்லிகா(78) வீட்டின் தரைதளத்தில் வசித்து வந்தார். விஜய் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் அதைதாங்க முடியாமல் ராஜலட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில்தான் அவரை, அவரது பெற்றோர் பண்ருட்டிக்கு அழைத்து வந்து விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த விஜய், ராஜலட்சுமியிடம் மீண்டும் மதுகுடிக்க பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய், சமையல் அறையில் இருந்த மைக்ரோ ஓவனை எடுத்து தாயாரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் ராஜலட்சுமி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். மேலும் அவர், தாய் என்றும் பாராமல் மைக்ரோ ஓவனால் மீண்டும், மீண்டும் அடித்து தலையை சிதைத்து கொன்றார். இது குறித்து தகவல் தெரிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்தனர். பெற்ற தாயை மகனே அடித்துக்கொன்ற சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை