பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை

  தினத்தந்தி
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமனத்துக்கு தடை

மதுரை,திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவில் பிரசித்தி பெற்றது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் செட்டிநாடு நகரத்தார் சமூகத்தை சேர்ந்த 20 குடும்பத்தினரால் பாரம்பரியமாக சுழற்சி முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1978-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்த திட்டப்படி, மேற்கண்ட 20 குடும்பத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கற்பக விநாயகர் கோவிலின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அறங்காவலர்களாக பதவி வகித்து உள்ளனர். தற்போது எங்களது குடும்பத்தினர் அறங்காவலர்களாக பதவி வகிக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு வேண்டிய நபரை அறங்காவலராக நியமிக்கும்படி சிலர் இடையூறுகளை செய்து வருகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பானது. எனவே விதிமுறைகளின்படி எங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அறங்காவலராக இந்த ஆண்டில் நியமிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை வேறு நபர்களை அறங்காவலர் பதவிக்கு நியமிக்க அறநிலையத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பிள்ளையார்பட்டி கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், அறங்காவலர் நியமனத்தில் சட்டவிதிமுறைகள் மீறப்படவில்லை என்றார். அப்போது நீதிபதி, தமிழ்நாட்டில் இந்த கோவில் மட்டும்தான் முறையாக செயல்படுவதாக நினைத்தேன். இங்கும் இப்படியெல்லாம் நடப்பது வருத்தம் அளிக்கிறது என்றார். விசாரணை முடிவில், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் அறங்காவலர் நியமன விவகாரத்தில் வருகிற 18-ந்தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

மூலக்கதை