தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: மேயர் பேச்சுவார்த்தை

  தினத்தந்தி
தூத்துக்குடியில் கொட்டும் மழையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: மேயர் பேச்சுவார்த்தை

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூடுதல் ஊதியம் வழங்கக் கோரி கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் ஊதியத்தையும் மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் கூடுதல் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் தீபாவளிக்கு வழங்கப்பட்ட ரூ.2,000 முன்பணத்தை 10 மாதங்களாக தவணை முறையில் திருப்பி செலுத்துவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த மாத சம்பளத்தில் இருந்து முன் அறிவிப்பின்றி ரூ.1,000 பிடித்தம் செய்யப்பட்டது. இதுபோல் மாநகராட்சி ஒப்பந்ததாரருக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் தான் தூய்மை பணியாளர்களின் ரூ.1,500 பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஊதியத்தை உடனடியாக வழங்குவது, தீபாவளி முன்பணத்தை பிடித்தம் செய்ததைக் குறைக்க வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடியில் முக்கிய பகுதிகளில் தூய்மைப் பணி பாதிக்கப்பட்டது. இதனை ெதாடர்ந்து தூய்மை பணியாளர்களுடன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் வருவாய் துறையினர், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

மூலக்கதை