வரியை குறைக்கப்போகும் டிரம்ப்
ஒன்றை அடையவேண்டும் என்றால் மற்றொன்றை தியாகம் செய்யவேண்டும் என்பதுதான் உலக நியதி. மெழுகுவர்த்தி உருகுவதால்தான் இருளை விரட்டும் ஒளி பிறக்கிறது. அதுதான் இப்போது அமெரிக்காவுடன் இருக்கும் வர்த்தக உறவில் நடந்திருக்கிறது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக கலாசார உறவு, வர்த்தக உறவு மட்டுமல்லாமல் ராஜ்ய உறவும், நட்புறவும் மேலோங்கி இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2-வது முறையாக பதவியேற்றவுடன் இந்த உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. முதல்முறை பதவியில் இருந்தபோது இருந்த டிரம்பின் முகம் 2-வது முறையாக பதவியேற்ற பின் வேறுமுகமாக மாறியது. அமெரிக்கா முதலில் என்ற பிரகடனத்துடன் தன் பாதையை வகுத்த டிரம்ப், அனைத்து நாடுகளில் இருந்தும் அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தார். அந்த வகையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சற்று பாதிப்பு ஏற்பட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற உணர்வுடன் இருந்தபோது அடுத்த இடியாக இந்தியா, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என்று தடை போட்டார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் அந்த பணத்தை வைத்து உக்ரைனுடன் ரஷியா போரிடுகிறது என்று இல்லாத ஊருக்கு போகாத வழியாக ஒரு காரணத்தைக் கூறி மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் வைரம், மருத்துவ சாதனங்கள், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், நகைகள், வாகன உதிரிபாகங்கள், ஆடைகள், ரசாயனம் சார்ந்த பொருட்கள், எந்திரங்கள், விவசாய கருவிகள் உள்பட பல பொருட்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏனெனில் 50 சதவீத வரியை செலுத்தி மற்ற நாடுகளுடன் போட்டிப்போடவே முடியாத நிலை இருந்ததால், ஏற்றுமதியாளர்கள் தடுமாறிப் போனார்கள். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திருப்பூர் ஆடைகள், ஆம்பூர் காலணிகள் உள்பட பல பொருட்களின் ஏற்றுமதி பாதித்தது. இந்த நிலையில் ரஷியாவில் உள்ள 2 எண்ணெய் கம்பெனிகளுக்கு அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகளால் இந்திய நிறுவனங்கள் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தின. முதலில் ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்தியது. இப்போது 5 பெரிய சுத்திகரிப்பு ஆலைகள் அடுத்த மாதத்துக்கு எந்த ஆர்டரும் கொடுக்கவில்லை. இதனால் மகிழ்ச்சியடைந்த டிரம்ப் நேற்று முன்தினம் ஒரு நல்ல தகவலை பகிர்ந்தார். இந்திய பொருட்களுக்கு விதிக்கப்படும் 50 சதவீத வரியை விரைவில் குறைக்கப் போவதாக அறிவித்தார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்படும் வரி மிக அதிகமாக இருக்கிறது. இப்போது அதை இந்தியா நிறுத்திவிட்டது. எனவே நாங்களும் வரியை குறைக்கப் போகிறோம். இந்தியாவும், அமெரிக்காவும் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கி நெருங்கி வந்திருக்கின்றன. இதுவரை இல்லாத ஒப்பந்தத்தை மேற்கொள்ளப் போகிறோம். இப்போது இந்தியா எங்களை விரும்பவில்லை. ஆனால் மீண்டும் எங்களை விரைவில் விரும்பும் என்று அறிவித்தார். ஆக மீண்டும் அமெரிக்காவுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது. வர்த்தக உறவோடு நின்றுவிடாமல் விசா உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் அமெரிக்கா தளர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் இந்த ஒப்பந்தம் மகிழ்ச்சியை தந்தாலும், இதுவரை கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு தந்த ரஷியாவிடம் இருந்து, இனி அதனை வாங்கப்போவது இல்லை என்பது சற்று வருத்தமாக இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள்.




நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
டெல்லி: திடீரென தாக்கிய குரங்கு; 7-வது மாடியில் இருந்து குதித்த மத்திய அரசு ஊழியர்
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆயுதபூஜை விடுமுறை: 4 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
இந்திய அணி வீரர்கள் மீது அஸ்வின் அதிருப்தி
கிளட்ச் செஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் கார்ல்சன்
ஆஷஸ் முதல் டெஸ்ட்: கம்மின்ஸ் விலகல்... ஆஸி. அணிக்கு புதிய கேப்டன் நியமனம்
ஐ.சி.சி. தரவரிசை: இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா முன்னேற்றம்
அடுத்த அவதாரம்.. டிரோன் பைலட் உரிமம் பெற்ற தோனி
