மணிப்பூரில் 4 குகி பயங்கரவாதிகள் அடாவடி; சுட்டு கொன்ற ராணுவம்

  தினத்தந்தி
மணிப்பூரில் 4 குகி பயங்கரவாதிகள் அடாவடி; சுட்டு கொன்ற ராணுவம்

கவுகாத்தி, மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். பின்பு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால், அவ்வப்போது ஊருக்குள் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தன. பலர் தாக்கப்பட்டனர். இதனால், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், மணிப்பூரில் கான்பி கிராமத்தில் ஐக்கிய குகி தேசிய ராணுவம் (யு.கே.என்.ஏ.) என்ற பெயரில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் சிலர் ஆயுதங்களுடன் கூடியுள்ளனர் என இந்திய ராணுவத்துக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து இந்திய ராணுவமும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று, அவர்கள் துப்பாக்கிகளால் சுட தொடங்கினர். இதனால், ராணுவமும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், 4 குகி பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தப்பியோடி காட்டுக்குள் மறைந்து விட்டனர். சமீப வாரங்களாக அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், கிராம தலைவர் உள்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர். மக்களை மிரட்டுவது, வன்முறையில் ஈடுபடுவது, அமைதியை சீர்குலைப்பது என அந்த பகுதியையே பதற்றத்துடன் வைத்திருந்தனர்.

மூலக்கதை