மருத்துவமனையில் ரஜினி: காரணம் தெரியாமல் ரசிகர்கள் கவலை

  தமிழ் முரசு
மருத்துவமனையில் ரஜினி: காரணம் தெரியாமல் ரசிகர்கள் கவலை

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் இடையே கவலை நிலவிவருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.73 வயதாகும் ரஜினிகாந்த், செப்டம்பர் 30ஆம் தேதி இரவு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அங்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் விகடன் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ரத்தநாளத்தில் அடைப்பு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதைச் சரி செய்ய, அதிநவீன ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், ரஜினிகாந்த் எதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, “ரஜினிகாந்த் விரைந்து நலம்பெற விழைகிறேன்,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.ரஜினி தற்போது நலமாக உள்ளார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினி, அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்ககத்தில் ‘கூலி’ படத்தில் நடித்துவருகிறார்.

மூலக்கதை