‘பிள்ளையார் சுழி’க்காக ஊதியம் பெறாத ரேவதி
‘டபுள் டக்கர்’ படத்தின் மூலம், கோடம்பாக்கத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தீரஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதுப்படம் ‘பிள்ளையார் சுழி’. மனோகரன் பெரிய தம்பி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய படைப்புகளில் தானும் ஏதேனும் ஒரு வகையில் பங்களிக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையுடையவர் ரேவதி. “எனது ‘பிள்ளையார் சுழி’ படமும் அப்படிப்பட்ட படைப்புதான் என்பதால் இதில் நடிப்பது தனது கடமை என்று ரேவதி கூறிவிட்டார். ஒரு ரூபாய்கூட ஊதியமாக வாங்க மாட்டேன் என்று திட்டவட்டமாக இருந்தார். அவருக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்,” என்கிறார் தீரஜ்.இதில், இதய அறுவை சிகிச்சை நிபுணராக நடித்துள்ளாராம். தாம் பணம் சம்பாதிப்பதற்காக திரையுலகுக்கு வரவில்லை என்றும் நல்ல படைப்புகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு திறமை வாய்ந்த கலைஞன் என்று பெயர் எடுப்பதே தமது நோக்கம் என்றும் கூறுகிறார். “இன்று மாற்றுப்பாலினத்தவர் குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மகத்தானது. ‘ஆட்டிசம்’ பாதிப்புள்ள குழந்தைகளைப் பாதுகாத்து அன்பு செலுத்த வேண்டிய பெற்றோர்களுக்கும் பொது சமூகத்துக்கும் அத்தகைய விழிப்புணர்வு இல்லை. “இந்தப் படம் அப்படிப்பட்ட விழிப்புணர்வுக்கு ‘பிள்ளையார் சுழி’ போடும் விதமாக உருவாகிறது,” என்கிறார் தீரஜ்.