மீன்பிடிப் படகு தாக்கப்பட்டதில் 10 பேர் காயம்

  தமிழ் முரசு
மீன்பிடிப் படகு தாக்கப்பட்டதில் 10 பேர் காயம்

ஹனோய்: சீனாவும் வியட்னாமும் சொந்தம் கொண்டாடும் பாரசெல் தீவுகளுக்கு அருகே மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது வெளிநாட்டுப் படகால் தங்கள் படகு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குறைந்தது 10 வியட்னாமிய மீனவர்கள் காயமடைந்ததாக அரசு ஊடகங்கள் திங்கட்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தன.இந்தத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக தெரிவித்த ‘தான் நியன்’ ஊடகம், மத்திய மாநிலமான சுவான் ஙாய் அதிகாரிகளை மேற்கோள் காட்டியது. வெளிநாட்டுப் படகு குறித்த விவரத்தையோ அந்த மீன்பிடிப் படகு எப்படி தாக்கப்பட்டது என்பது பற்றியோ அந்த ஊடக அறிக்கை குறிப்பிடவில்லை.காயமுற்ற மீனவர்களில் மூவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டதாக அறிக்கை கூறியது. சுவான் ஙாய் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து செப்டம்பர் 13ஆம் தேதி 10 மீனவர்களுடன் அந்தப் படகு புறப்பட்டதாக அறிக்கை சொன்னது.இந்தச் சம்பவம் குறித்து வியட்னாமிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அது குறிப்பிட்டது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் கேள்விகளுக்கு வியட்னாமிய, சீன வெளியுறவு அமைச்சுகள் பதிலளிக்கவில்லை.

மூலக்கதை