மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடியை செலவிட்டது எப்படி? மம்தாவிடம் கணக்கு கேட்கிறார் கவர்னர்

  தினத்தந்தி
மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடியை செலவிட்டது எப்படி? மம்தாவிடம் கணக்கு கேட்கிறார் கவர்னர்

கொல்கத்தா,மேற்கு வங்காள மாநிலத்திற்கு 2023-24ம் நிதியாண்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1.17 லட்சம் கோடி நிதியை செலவு செய்தது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு அந்த மாநிலத்தின் கவர்னர் சி.வி.ஆனந்தா போஸ் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் மத்திய அரசின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், மேற்கு வங்காள மாநிலம் தற்போது பல்வேறு நிதி அபாயங்கள் மற்றும் பொது நிதி மேலாண்மை சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் கடந்த 2018-19ல் சுமார் ரூ.33,500 கோடியாக இருந்த நிதிப்பற்றாக்குறை, 2022-23ல் ரூ.49,000 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், அதே சமயம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி(ஜி.எஸ்.டி.பி.)-கடன் விகிதம் 35.69 சதவீதத்தில் இருந்து 37 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் சி.வி.ஆனந்தா போஸ் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2021-22 முதல் 2022-23ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கு வங்காள அரசு கடன்களை திருப்பி செலுத்துவதற்காக பொதுக்கடன் நிதியின் பெரும்பகுதியை பயன்படுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். நிதி ஆயோக் பரிந்துரைகளால் மேற்கு வங்காள அரசு பெரிதும் பயனடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், 2021-22 முதல் 2024-25 வரை வருவாய் பற்றாக்குறை மானியமாக மேற்கு வங்காளத்திற்கு ரூ.40,115 கோடி நிதியை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 2023-24ம் ஆண்டில், மேற்கு வங்கத்தின் மொத்த வருவாயான ரூ.2.13 லட்சம் கோடியில், மத்திய நிதி பகிர்மானம் மட்டும் ரூ.1.17 லட்சம் கோடியாக இருந்தது எனவும், இது மாநிலத்தின் மொத்த வருவாயில் 55 சதவீதம் என்றும் சி.வி.ஆனந்தா போஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் மேற்கு வங்காள அரசு தொடர்பான 6 சி.ஏ.ஜி. அறிக்கைகள் இன்னும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள அவர், அரசியலமைப்பு சட்டம் 151-வது பிரிவின் கீழ், ஒரு மாநிலத்தின் கணக்குகள் தொடர்பான சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கைகளை கவர்னரிடம் சமர்ப்பிக்கலாம் என்றும், கவர்னர் அதனை சட்டசபையில் தாக்கல் செய்யலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மாநில அரசின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை மம்தா பானர்ஜி வெளியிட வேண்டும் எனவும் கவர்னர் ஆனந்தா போஸ் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை