லெபனான் மீது தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

  தமிழ் முரசு
லெபனான் மீது தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்

பெய்ரூட்: லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து ‘வரையறுக்கப்பட்ட’ தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.கடந்த சில தினங்களாக லெபனானில் வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அதிகாலை முதல் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. லெபனானின் எல்லையில் இஸ்ரேலியப் படையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. “தெற்கு லெபனானில் உள்ள கிராமப்பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கியுள்ளனர், அவர்கள் வடக்கு இஸ்ரேலுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். நன்கு ஆராயப்பட்ட தகவல்களைக் கொண்டு தாக்குதல் தொடங்கியுள்ளது,” என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது. தரையில் போரிடும் ராணுவ வீரர்களுக்குத் துணையாக வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அது குறிப்பிட்டது. இந்நிலையில் எல்லை கிராமங்களில் தங்கியுள்ள லெபனான் மக்கள் பதற்றத்துடனும் பயத்துடனும் உள்ளனர். கடுமையான குண்டு சத்தங்களும், பல ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வானூர்திகள் தங்களது வீடுகளுக்கு மேல் பறப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர். கடந்த சில நாள்களாக லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பலர் கொல்லப்பட்டனர். இருப்பினும் 1000க்கும் அதிகமான பொதுமக்களும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. தற்போது இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கை மத்திய கிழக்கு வட்டாரத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸாமீதான தாக்குதலை கண்டித்து ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கியது. அதற்கு பதிலடி தரும்விதமாக தற்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை தாக்கி வருகிறது. ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக ஈரான் களமிறங்கினால் இது முழுமையான போராக மாறலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் லெபானானில் பதுங்கியுள்ள பாலஸ்தீனத்தின் ஃபாடா அமைப்பின் தளபதிகளில் ஒருவரான முனீர் மக்தாவை குறிவைத்து செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் முனீர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சிடான் நகரத்தின் தெற்கில் உள்ளது. அங்கு பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் உள்ளன. இதற்கிடையே இஸ்ரேல் சிரியாவிலும் தாக்குதலை தொடர்கிறது. தலைநகர் டமாஸ்கசில் நடத்திய தாக்குதலில் 3 பேர் மாண்டனர், 9 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பு எந்த கருத்துகளையும் வெளியிடவில்லை.

மூலக்கதை