உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை 3 போட்டியாக நடத்த வேண்டும்- நாதன் லயன்/ Nathan Lyon advocates unique proposition of three-match World Test Championship Final
மெல்போர்ன்:3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள நாதன் லயனின் வீடியோ பதிவில் 'நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 3 ஆட்டங்கள் கொண்டதாக நடப்பதை பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் ஒரு செஷனில் சரியாக செயல்படாவிட்டாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் நீங்கள் தோற்க நேரிடலாம். ஆனால் 3 ஆட்டங்கள் கொண்ட இறுதிப்போட்டியாக இருந்தால் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும். அத்துடன் ஆதிக்கம் செலுத்தினால் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற முடியும். 3 டெஸ்ட் கொண்டதாக இறுதிப்போட்டி இருந்தால் சவால் நிறைந்ததாக இருக்கும். மேலும் இந்த இறுதிப்போட்டிகளை வெவ்வேறு மைதானங்களில் நடத்தினால் ஒரு அணிக்கு மட்டும் சாதகமாக இல்லாமல் இரு அணிக்கும் சமவாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் போட்டியில் சவாலும், விறுவிறுப்பும் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.