Kolkata Doctor Parents Claim Police Tried To Bribe After Daughter Murdered, போலீஸ் அதிகாரி பணம் தர முயன்றார்: கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் பரபரப்பு தகவல்
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் கடந்த மாதம் 9-ந்தேதி ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதைத்தொடர்ந்து வெளியான தகவல்களில் பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டியும், பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து போராடினர். தற்போது இரவை மீட்டெடுப்போம் என போரட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண் மருத்துவரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், "போலீசார் முழுமையான விசாரணையின்றி வழக்கை முடிக்க முயற்சித்தனர். போலீசார் ஆரம்பத்திலிருந்தே வழக்கை மூடி மறைக்க முயன்றனர். எங்களை உடலைப் பார்க்க அனுமதிக்கவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும்போது காவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்தது. மகள் கொலைக்கு பிறகு போலீஸ் அதிகாரி ஒருவர் எங்களிடம் பணத்தை கொடுக்க முயன்றார். நாங்கள் உடனடியாக அதை மறுத்தோம்" எனத் தெரிவித்தனர்.பெண் டாக்டர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், கொல்கத்தா காவல்துறை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.