புதிய அமைச்சரவையை அங்கீகரித்த தாய்லாந்து மாமன்னர்

  தமிழ் முரசு
புதிய அமைச்சரவையை அங்கீகரித்த தாய்லாந்து மாமன்னர்

பேங்காக்: தாய்லாந்து மாமன்னர் மகா வஜ்ரலோங்கொர்ன், அந்நாட்டுப் பிரதமர் பெய்த்தொங்தார்ன் ‌ஷினவாத்தின் புதிய அமைச்சரவையை அங்கீகரித்துள்ளார்.புதன்கிழமையன்று (செப்டம்பர் 4) தாய்லாந்தின் அரசு நாளிதழில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 அமைச்சர்களைக் கொண்ட அந்நாட்டின் புதிய கூட்டணி ஆட்சியில் 12 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளன. திருவாட்டி பெய்த்தொங்தார்ன், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தால் அடுத்த தாய்லாந்துப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 38 வயதாகும் அவர், தாய்லாந்தின் ஆக இளம் பிரதமராவார்.எதிர்பாரா வகையில் திரு ஸ்ரெத்தா தவிசின் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.திருவாட்டி பெய்த்தொங்தார்னின் ஃபியூ தாய் கட்சி, 2001ஆம் ஆண்டிலிருந்து வெவ்வேறு வகைகளில் தாய்லாந்தை வழிநடத்தி வந்துள்ளது. புதிய அமைச்சரவையில் அக்கட்சிக்குத்தான் அதிக ஆதிக்கம் உள்ளது.திரு பிச்சை சின்ஹவாஜிரா நிதி அமைச்சராகவும் திரு மாரிஸ் சங்கியாம்பொங்சா வெளியுறவு அமைச்சராகவும் தொடர்ந்து பதவி வகிக்கவுள்ளனர்.துணைப் பிரதமர் ஃபும்தாம் வெச்சாயாச்சை, தற்காப்பு அமைச்சர் பொறுப்பு வகிப்பார். அவர் வகித்த வர்த்தக அமைச்சர் பொறுப்பு ஃபியூ தாய் கட்சியின் முன்னணி ஆலோசகரும் முன்னாள் எரிசக்தி அமைச்சருமான பிச்சை நரிப்தஃபானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையில் 17 இடங்களை ஃபியூ தாய் கட்சி வகிக்கிறது.

மூலக்கதை