பெண் காவல் அதிகாரியின் தலைமுடியை இழுத்துத் தாக்குதல்: எழுவர் கைது, ஒருவர் தலைமறைவு
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திருச்சுழி - ராமேஸ்வரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் காளிகுமார்,33, என்னும் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு கூடிய காளிகுமாரின் உறவினர்கள், கொலையாளிகளை உடனே கைதுசெய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களைத் தடுத்த பெண் டிஎஸ்பி காயத்ரியின் தலைமுடியை இழுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலைத் தடுக்க முயன்ற காவலர்களையும் போராட்டக்காரர்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக எஸ்பி கண்ணன் நேரில் விசாரணை நடத்தினார். காயத்ரி தாக்கப்பட்டது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.