ஜனாதிபதி தேர்தல்: 24,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு! - லங்காசிறி நியூஸ்
2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக 736,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.24,268 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 712,321 விண்ணப்பதாரர்கள் தபால் மூல வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டு விநியோகம் ஆகஸ்ட் 26ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் மூன்று நாட்களுக்கு தபால் வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தேர்தல் ஆணைய தலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். “அஞ்சல் வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது நிறைவடைந்துள்ளது. தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி அடுத்த சில நாட்களில் அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இம்மாதம் 26ஆம் திகதி அந்தந்த தபால் மூல வாக்குகள் உரிய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது” என்றார்."ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறும். மேலும் செப்டம்பர் 04 ஆம் திகதி மாவட்டச் செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் காவல்துறையினருக்கு தபால் வாக்குகளை அடையாளப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது."இதேவேளை, தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு மேலதிக திகதியாக செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. மேலும் மொத்தமாக 39 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.