வார இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை
மும்பை,பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதானி குழுமம் பங்குகள் சரிவை சந்தித்ததையொட்டி இந்திய பங்குச்சந்தையும் சற்று சரிவை கண்டது.இந்நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று ஐடி பங்குகள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உலகளாவிய பங்குகள் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. அந்த வகையில் நிப்டி 397.40 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 541.15 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது.அதேபோல, பிஎஸ்இ சென்செக்ஸ் 1,330.96 உயர்ந்து 80 ஆயிரத்து 436.84 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் நிறுவனங்களில் இருந்து டெக் மஹிந்திரா, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ வங்கி மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின. ஆனால் சன் பார்மா இன்று பின்தங்கிய நிறுவனமாக நிறைவடைந்தது.மேலும் பேங்க் நிப்டி 789.60 புள்ளிகள் உயர்ந்து 50 ஆயிரத்து 516.90 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தது. பிஎஸ்இ மிட்கேப் 1.8 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 1.7 சதவீதமும் உயர்ந்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் கணிசமாக உயர்ந்தன. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் பச்சை நிறத்தில் வர்த்தகமாகின. நேற்று அமெரிக்க சந்தைகள் கடும் ஏற்றத்துடன் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.