ஹமாஸ் தலைவர் படுகொலை

  தமிழ் முரசு
ஹமாஸ் தலைவர் படுகொலை

தெஹ்ரான்: ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக ஜூலை 31ஆம் தேதியன்று தெரிவிக்கப்பட்டது.இந்தத் தகவலை ஹமாஸ் அமைப்பு வெளியிட்டது.ஈரானிய அதிபரின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திரு ஹனியே, அந்நாட்டுத் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்றிருந்ததாக ஹமாஸ் கூறியது.தெஹ்ரானில் அவர் தங்கிய இடத்தில் இஸ்‌ரேல் நயவஞ்சகமாகத் தாக்குதல் நடத்தி திரு ஹனியேவைக் கொன்றதாக அது குற்றம் சாட்டியுள்ளது.திரு ஹனியேவுடன் அவரது மெய்க்காப்பாளர் ஒருவரும் மாண்டதாக ஈரானின் புரட்சிப் படை உறுதிப்படுத்தியது.இதுகுறித்து இஸ்‌ரேல் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.திரு ஹனியே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, காஸா போர் மோசமடையும் சாத்தியம் அதிகமுள்ளதாக அஞ்சப்படுகிறது.இந்தப் படுகொலையால் ஏற்பட்டுள்ள பதற்றநிலையை தணிக்க அமெரிக்கா முயற்சி செய்யும் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஆஸ்டின் கூறினார்.ஆனால் இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதைத் தற்காக்க அமெரிக்கா உதவும் என்றார் அவர்.ஜூலை 30ஆம் தேதி ஈரானின் புதிய அதிபராக மசூது பெசெஸ்கியன் பதவி ஏற்றார்.பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள திரு ஹனியே தெஹ்ரான் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.திரு ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்குப் பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அபாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.வேலை நிறுத்தப் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றுக்குப் பாலஸ்தீன அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.இந்தக் கோழைத்தனமான செயலுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி மூசா அபு மார்சுக் சூளுரைத்ததாக ஹமாஸ் அமைப்புக்குச் சொந்தமான அல் அக்சா தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்தது.திரு ஹனியே, ஹமாஸ் அமைப்பின் தலைவராக 2017ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.காஸா முனை முற்றுகை காரணமாக, வேறு நாடுகளுக்குப் பயணம் செய்வதில் அவருக்குச் சிரமம் ஏற்பட்டது.எனவே, போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இருக்கும் ஈரானியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவும் அவர் துருக்கிக்கும் கத்தார் தலைநகர் தோஹாவுக்கும் இடையே பயணம் செய்தார்.இதற்கிடையே, லெபனான் தலைநகர் பெய்ருட்டில் உள்ள கட்டடம் ஒன்றை இஸ்‌ரேலியப் படைகள் குறிவைத்துத் தாக்கியதாகவும் அப்போது அக்கட்டடத்தில் தனது மூத்த தளபதிகளில் ஒருவரான ஃபுவாட் ஷுக்கர் இருந்ததாகவும் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது.ஆனால் ஷுக்கருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அது தகவல் வெளியிடவில்லை.ஷுக்கரைக் கொன்றுவிட்டதாக ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது.அண்மையில் கோலான் ஹைட்ஸ் பகுதியில் உள்ள காற்பந்துத் திடல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு ஷுக்கர்தான் காரணம் என்று அது குற்றம் சாட்டியது.அந்தத் தாக்குதலில் பல சிறுவர்கள் மாண்டனர்.அந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

மூலக்கதை