வயநாடு உயிரிழப்பு 185 ஆக அதிகரிப்பு, கொடூர போர்க்களமாகக் காட்சியளிக்கும் கிராமங்கள்

  தமிழ் முரசு
வயநாடு உயிரிழப்பு 185 ஆக அதிகரிப்பு, கொடூர போர்க்களமாகக் காட்சியளிக்கும் கிராமங்கள்

வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 185 பேர் உயிரிழந்துவிட்டனர். வயநாட்டில் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் நூற்றுக்கணக்கானோர் மண்ணுக்கு அடியில் சிக்கித் தவிக்கின்றனர்.சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில், 3 கிராமங்களை சேர்ந்த சுமார் 400 குடும்பங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.ராணுவம், விமானப் படை, கடற்படை, தேசிய - மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்பு வீரர்கள், காவலர்கள், தொண்டூழியர்கள் உட்பட பலரும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 225 பேர் காணாமல் போயுள்ள நிலையில், இப்பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிவாரண உதவிகளை அளிக்க அழைப்பு விடுத்துள்ள பினராயி விஜயன், வயநாட்டுக்கு மீட்புப் படையினரைத் தவிர வேறு யாரும் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் மற்றவர்களைச் சூழ்நிலை காரணமாக தடுத்து நிறுத்த வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை (ஜூலை 31) காலை மூத்த அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் குழுவினருடன் அவசர ஆலோசனை அவர் நடத்தினார். அனைத்து துறைகளையும் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) அனைத்து கட்சி கூட்டத்திற்கு பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். நிலச்சரிவை ஒட்டி, கேரளாவில் 2 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கேரள சட்டமன்றத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. சில ஊர்களில் அனைத்தும் மண்ணால் மூடப்பட்டு, அழகிய பகுதிகள் அனைத்தும் பயங்கரமான போர்க்களமாகக் காட்சியளிக்கிறது. வீடுகள் எல்லாம் பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் வகையில், நிலச்சரிவில் சிக்கி சின்னபின்னமாகிக் கிடக்கின்றன.சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக இருந்த முண்டக்கை, சூரமலை பகுதிகள், இடிந்த கட்டடங்கள், சேறு நிறைந்த பள்ளங்கள், பாறைகள் நிறைந்த விரிசல் நிலமாக காணப்படுகின்றன.மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முண்டக்கையில், சில கிலோ மீட்டர் வரை மக்கள் வாழ்ந்த தடயமே இல்லாமல் ஒரு ஊரையே காணவில்லை என்று மக்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். எறுவழிஞ்சி ஆற்றின் பாதையே மாறி, ஒரு கிராமத்துக்கு நடுவில் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பதைப்போல சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சில நாள்களுக்கு முன்பு அங்கு ஓர் அழகிய கிராமம் இருந்தது என்பதற்கான எந்த மிச்சத்தையும் அந்த ஆறு விட்டுவைக்கவில்லை.இந்தக் கிராமத்தில்தான் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் விடுதிகள் அமைந்திருந்தன. இங்கிருந்த அரசு உயர்நிலைப் பள்ளியையும் பாதி காணவில்லை. இங்கிருந்த 24 குழந்தைகள் காணாமல் போனதாக பள்ளித் தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.சூரமலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 31 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள், அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவினர் தகவல் சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து 45 நிவாரண முகாம்களில் பதிவான விவரங்களை வைத்து தகவல் சேகரிக்கப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று கேரள அரசுக்கு ஜூலை 23, ஜூலை 24 ஆகிய தேதிகளில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கும் படுகாயமடைந்தவர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளது. தமிழகம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள மாநில அரசுக்கு ரூ.5 கோடி நிவாரணத் தொகை வழங்கியுள்ளார். மேலும் கேரளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

மூலக்கதை