கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம்: விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்  லங்காசிறி நியூஸ்

இலங்கையின் கொழும்புவில் கொம்பனித்தெருவில் உள்ள அல்டேர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றின் 15 வயதுடைய இரு மாணவர்கள் ஜூலை 2 அன்று கொழும்புவில் கொம்பனித்தெருவில் உள்ள அல்டேர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து விழுந்தனர்.இருவரும் வகுப்பு தோழர்கள் மற்றும் பள்ளி முடிந்ததும் கட்டிடத்தில் ஒரு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். குறித்த விழாவில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் இவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்கள் தாக்கியதில் உடல்கள் பலத்த சேதமடைந்துள்ளன. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் பிரேத பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளது.   நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மாணவனுக்கும் சிறுமிக்கும் இடையில் பலமான நட்புறவு இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.மேலும், குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ளார், மேலும் அவரது கைத்தொலைபேசியில் இதுபோன்ற பல புகைப்படங்களை பொலிஸார்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். அல்டேர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுவதற்கு அங்கு வசித்த அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அடிக்கடி வந்து செல்வதாகவும், சம்பவம் நிகழ்ந்த திகதி அன்று வீட்டில் தெரிவிக்காமல் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கொம்பனியா தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கபில விஜேமான்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

மூலக்கதை