கீழ் நோக்கி துளையிடும் பணி சுணக்கம்: தொழிலாளர்களை மீட்க 5 நாட்களாகும்

தினமலர்  தினமலர்
கீழ் நோக்கி துளையிடும் பணி சுணக்கம்: தொழிலாளர்களை மீட்க 5 நாட்களாகும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உத்தரகாசி: உத்தரகண்டில் சுரங்கப்பாதை அமைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக, மலையின் உச்சியில் இருந்து துளையிடும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ஒரு வாரமாக உள்ளே சிக்கியுள்ள, 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சி முடிய, மேலும் ஐந்து நாட்களாகும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரையும் பத்திரமாக மீட்கும் வகையில், பல் துறை உயரதிகாரிகள் அங்கு குவிந்து, மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா - தண்டல்காவ்ன் இடையே மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, சுரங்கப் பாதையின் முகப்புக்கும், தொழிலாளர்கள் பணி செய்த பகுதிக்கும் இடைபட்ட பகுதி திடீரென சரிந்து விழுந்தது.

இதில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். ஒரு வாரமாக, அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இடிபாடுகள் வழியாக பெரிய குழாய்களை பொருத்தி, உள்ளே சிக்கியுள்ளோரை மீட்கும் பணி நடந்தது. ஆனால், திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், அந்த பணி நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாற்று முயற்சியாக, அந்த சுரங்கப்பாதை அமைந்துள்ள மலையின் மேல்பகுதியில் இருந்து செங்குத்தாக துளை அமைத்து, தொழிலாளர்களை மீட்க திட்டமிடப்பட்டது.

இதையடுத்து, மலையின் மேல் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக, சாலை அமைக்கும் பணியில், எல்லை சாலை அமைப்பு ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து செங்குத்தாக துளையிடும் பணி துவங்கும் என கூறப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரை பணிகள் துவங்கவில்லை.

இதற்கிடையே, சில்க்யாராவில் தற்காலிக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.

உள்ளே சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் உள்ளிட்டவற்றை அனுப்புவதற்காக, இடிபாடுகள் வழியாக அதிக விட்டம் உள்ள குழாய் அமைக்கும் பணி தனியாக நடந்து வந்தது. இதுவரை, 120 அடிக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகளை கண்காணிக்கவும், துரிதப்படுத்தவும், பல் துறை உயரதிகாரிகள், சில்க்யாராவில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் அலுவலக அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர்.

மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியும், நேரில் சென்று மீட்பு பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். உத்தர கண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் உடன் இருந்தார்.

பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகரும், உத்தரகண்ட் அரசின் சிறப்பு அதிகாரியுமான பாஸ்கர் குல்பே, பணிகளை பார்வையிட்டு வருகிறார். ''அனைத்தும் சரியாக நடந்தால் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் உள்ளே சிக்கியுள்ளோரை மீட்க முடியும்,'' என, பாஸ்கர் குல்பே தெரிவித்தார்.

இந்த சுரங்கப் பாதையை அமைக்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அஹமது, அனைத்து மத்திய அரசு துறைகளுடனும் ஒருங்கிணைக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே, மீட்புப் பணிகளை கவனிக்கும் அதிகாரியாக, செயலர் அந்தஸ்தில் உள்ள நீரஜ் கைர்வாலை, உத்தரகண்ட் அரசு நியமித்து உள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஆகிய அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுஉள்ளன.

இதைத் தவிர, ஓ.என்.ஜி.சி., சட்லஜ் ஜல் விகாஸ் நிகம் உள்ளிட்ட அமைப்புகள், தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளன.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:மீட்பு பணி மிகவும் சவாலாக உள்ளது. மீட்பதற்கான என்னென்ன வாய்ப்புகள் உள்ளனவோ, அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மிகவும் விரைவாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுரங்கத்தின் சில பகுதிகள் மென்மையாகவும், சில பகுதிகள் கடினமாகவும் உள்ளதால், துளையிடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட இயந்திரம், மென்மையான இடங்களில் நன்றாக வேலை செய்தது. ஆனால், கடினமான பகுதிகளில் அது சரியாக செயல்படவில்லை. இதனால், செங்குத்தாக துளையிடுவதற்கான முயற்சி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.



மீட்பு பணிகள் குறித்து உத்தரகண்ட் சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை செயலர் அனுராக் ஜெயின் நேற்று கூறியுள்ளதாவது:சில்க்யாரா பகுதியில், 4.5 கி.மீ., துாரத்துக்கு இரண்டு வழி சுரங்கப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மலையைக் குடைந்து நடக்கும் இந்த சாலை பணியில், 2 கி.மீ., துாரத்துக்கு பணிகள் முடிந்துள்ளன. அங்கு மின்சாரம், குடிநீர் வசதி உள்ளது. இதனால், உள்ளே சிக்கியுள்ளோருக்கு தேவையான வெளிச்சம் மற்றும் குடிநீர் கிடைத்து வருகிறது.இதைத் தவிர, உள்ளே சிக்கியுள்ளோருக்கு, ஆக்சிஜன் கிடைப்பதற்கான வசதியும் உள்ளது. இதைத் தவிர, குழாய் வாயிலாக உணவுப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.அவர்களுக்கு தேவையான விட்டமின் மாத்திரைகள், மனசோர்வை நீக்கும் மருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், உலர் பழங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. ஐந்து அம்சங்களின் அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட ஐந்து அமைப்புகள் இந்த பணியை மேற்கொள்ள உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.



உத்தரகாசி: உத்தரகண்டில் சுரங்கப்பாதை அமைக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்காக, மலையின் உச்சியில் இருந்து துளையிடும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை