17 அடி அகல சாலையுள்ள மனைக்கும் அனுமதி: வீட்டுவசதி துறை தாராளம்

சென்னை : பொது கட்டட விதிகளில் குறிப்பிட்டதை விட, குறைந்த அகலத்தில் சாலை அமைந்த மனைப்பிரிவுகளுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் அங்கீகார மில்லாத மனைப்பிரிவுகளுக்கு தடை இருப்பதால், பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், புதிய மனைப்பிரிவுகளுக்கு முறையாக அங்கீகாரம் பெற முன்வந்துள்ளன.
இதனால், பொதுகட்டட விதிகளில் குறிப்பிட்டபடி, மனைப்பிரிவு அமைய வேண்டியது கட்டாயம்.
மேல்முறையீடு
விதிமுறைப்படி, மனைகளுக்கான அணுகு சாலை, 23 அடி அகலம் இருக்க வேண்டும். இந்த அகலத்தில் சாலை இருந்தால் மட்டுமே, அந்த மனைப்பிரிவில் எதிர்காலத்தில் போக்குவரத்து சார்ந்த பிரச்னைகள் தவிர்க்கப்படும்.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா, வடக்குபட்டி ஊராட்சி பகுதியில் புதிய மனைப்பிரிவு ஏற்படுத்த சின்னசாமி என்பவர் விண்ணப்பித்தார்.
இதற்கான நில விபரங்களை ஆய்வு செய்ததில், அங்கு, 17 அடி அகல சாலை மட்டுமே உள்ளது. இதனால், அந்த விண்ணப்பத்தை துாத்துக்குடி மாவட்ட நகர், ஊரமைப்பு துறை உதவி இயக்குனர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து, விண்ணப்பதாரர் ஒப்பதல் கோரி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த மேல்முறையீட்டு குழு, பொது கட்டட விதிகளின் அடிப்படையில், உரிய அகலத்தில் சாலை இல்லை என்பதை உறுதி செய்தது.
இருப்பினும், கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த மனைப்பிரிவுக்கு ஒப்புதல்அளிக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மேல் முறையீட்டு குழுவின் முடிவு, புதிய மனைப்பிரிவுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு தாராளம் காட்டுவதாக உள்ளது.
சாதகம்
இதை முன்மாதிரியாக வைத்து, 17 அடி அகல சாலை உள்ள பகுதியில், புதிய மனைப்பிரிவுகளுக்கு அனுமதி கோரி, மற்றவர்களும் விண்ணப்பிக்க வழி ஏற்பட்டுள்ளது.
இதே அளவுகோல், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்வதற்கும் கடைப்பிடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாலை அகலம் குறைவு என, கட்டுமான திட்ட அனுமதி தர மறுக்கப்பட்டோருக்கு, இது சாதகமான முடிவாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை : பொது கட்டட விதிகளில் குறிப்பிட்டதை விட, குறைந்த அகலத்தில் சாலை அமைந்த மனைப்பிரிவுகளுக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஒப்புதல் அளித்துள்ளது.தமிழகத்தில்
மூலக்கதை
