மாஜிக்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க கவர்னர் ஒப்புதல்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோருக்கு எதிரான, 'குட்கா' முறைகேடு ஊழல் வழக்கை விசாரிக்க கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டில் அனுப்பிய கோப்புக்கு, அனுமதி அளிக்கப்பட்டு விட்டதாக, உச்ச நீதிமன்றத்தில் கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை செங்குன்றம் பகுதியில், 2016ல் தடை செய்யப்பட்ட, 'குட்கா' தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதை, அண்ணா நகரில் வசித்து வரும் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் சட்ட விரோதமாக நடத்தி வந்தனர்.
ரகசிய டைரி
அவர்களின் வீடுகள், குட்கா தொழிற்சாலை மற்றும் குடோனில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரகசிய டைரி ஒன்று சிக்கியது.
அதில், குட்கா விற்பனையை கண்டு கொள்ளாமல் இருக்க, அப்போது அமைச்சர்களாக இருந்த, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், உணவு பாதுகாப்பு, மத்திய கலால் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்ட விபரங்கள் இருந்தன.
அதாவது, யார் யாருக்கு எவ்வளவு தொகை தரப்பட்டது என, மாதம் மற்றும் தேதி வாரியாக குறிப்புகள் இடம் பெற்றிருந்தன.
பின், இந்த விவகாரம், சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது. நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
அதன்பின், மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், மாநகராட்சி சுகாதார அதிகாரி சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது, 2021ல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, 2022 நவம்பரில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உட்பட, 11 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
குட்கா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில், மாதவ ராவ் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்கள் மட்டுமே வெளியில் சொல்லப்பட்டன.
மற்றவர்களில் யார் யாருக்கு எதிராக விசாரணை நடத்த, மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன என்ற குழப்பம் நீடித்து வந்தது. அதனால், குட்கா விவகாரத்தில் சிக்கிய, ஐ.ஜி., ரேங்கில் உள்ள, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் பதவி உயர்வு கிடைக்காமல் சிக்கலில் உள்ளார்.
தீர்மானம்
இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீதான வழக்கு நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு, கவர்னர் அனுமதி தருவதில் காலதாமதம் ஏற்பட்டது.
சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், இந்த வழக்கின் விசாரணை, 20 முறைக்கு மேல் தள்ளி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மசோதாக்கள் நிறுத்திவைப்பு, அரசு அனுப்பும் கோப்புகளை கிடப்பில் வைத்தல், ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்புதல் தொடர்பாக, கவர்னர் ரவிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கவர்னர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரம்:
குட்கா முறைகேடு புகாரில் சிக்கியுள்ள, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது, சி.பி.ஐ., குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, நவம்பர் 13ல், கவர்னர் ஒப்புதல் அளித்து விட்டார்
அ.தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரும் கோப்பு, கவர்னரின் பரிசீலனையில் உள்ளது
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்பான கோப்பில், முறையான அங்கீகரிக்கப்பட்ட விசாரணை அறிக்கைகள் இல்லை. இதனால், நவ., 15ல் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது
நீண்ட காலம் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக, 580 முன்மொழிவுகள் பெறப்பட்டு, 362க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன; 165 முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட்டு உள்ளன; 53 பரிசீலனையில் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோருக்கு எதிரான, 'குட்கா' முறைகேடு ஊழல் வழக்கை விசாரிக்க கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக, தமிழக அமைச்சரவை