தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி?ஸ்டாலின் அதிரடிக்கு சரியான பதிலடி தர கவர்னர் முடிவு

தினமலர்  தினமலர்
தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க அனுமதி?ஸ்டாலின் அதிரடிக்கு சரியான பதிலடி தர கவர்னர் முடிவு

கவர்னர் ரவிக்கு நெருக்கடி தரும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்த செயல்களை அரங்கேற்றி வரும் நிலையில், அவருக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு அனுமதி அளிக்க, கவர்னர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சூழலில், கவர்னர் ரவி திடீரென நேற்று டில்லி புறப்பட்டுச் சென்றது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டசபையில், தமிழக மீன்வள பல்கலை திருத்த சட்ட மசோதா, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை சட்ட திருத்த மசோதா, தமிழக பல்கலைகள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட, 10 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் தராமல், கவர்னர் நிலுவையில் வைத்திருந்தார்.

இந்நிலையில், சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்க, காலக்கெடு நிர்ணயிக்க வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

பதிலளிக்க உத்தரவு


இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கவர்னரின் செயலர், மத்திய உள்துறை செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, தன்னிடம் இருந்த, 10 மசோதாக்களை கவர்னர், இம்மாதம், 13ம் தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

உடன், கவர்னருக்கு நெருக்கடி தரும் வகையில், 18ம் தேதி தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நடந்தது. அதில், 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, சட்டசபை செயலகம் வாயிலாக கவர்னருக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டன.

இன்று விசாரணை


இந்நிலையில், கவர்னருக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்தச் சூழலில், கவர்னர் ரவி, சென்னையில் இருந்து விமானத்தில் நேற்று மாலை டில்லிக்கு அவசரமாக புறப்பட்டு சென்றார்.

அதே நேரத்தில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, சட்டசபை சிறப்பு கூட்டத்தை

மீண்டும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பியது என, தனக்கு, 'செக்' வைக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தந்த அதிரடிக்கு, சரியான பதிலடி தர கவர்னர் முடிவெடுத்துள்ளார்.

அதாவது, தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல் குறித்து வழக்குத் தொடுக்க அனுமதி கேட்டு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அளித்த மனுக்களுக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னர் தரப்பு முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, சட்ட நிபுணர்களிடம் கவர்னர் கருத்து கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. அப்போது, அண்ணாமலை குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர முகாந்திரம் உள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இதுதொடர்பாக அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியின் கருத்தை அறிவதற்காக, அவருடைய அலுவலகத்துக்கும், ஊழல் புகார் கோப்புகளை கவர்னர் அனுப்பி வைத்திருந்தார். டில்லி சென்ற போது, இருமுறை அட்டர்னி ஜெனரலையும் சந்தித்து பேசியுள்ளார். கவர்னர் அனுப்பிய கோப்புகளை ஆய்வு செய்த அட்டர்னி ஜெனரல், அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி அளிக்கலாம் என, பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.

எனவே, இந்த விஷயத்தில், கவர்னர் அதிரடி முடிவெடுத்தால், தி.மு.க., அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

கவர்னர் ரவிக்கு நெருக்கடி தரும் வகையில், முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்த செயல்களை அரங்கேற்றி வரும் நிலையில், அவருக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க., அமைச்சர்கள் மீதான ஊழல்

மூலக்கதை