சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 56 உதவி பேராசிரியர்கள் 'டிஸ்மிஸ்'

  தினமலர்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 56 உதவி பேராசிரியர்கள் டிஸ்மிஸ்



சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கல்வி தகுதி இல்லாமல் பணி புரிந்ததாக, 56 உதவி பேராசிரியர்களை, உயர்கல்வித்துறை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

அளவுக்கு அதிகமான ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பல்கலைகழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

அதையடுத்து, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2013 ம் ஆண்டு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

பல்கலைக்கழகத்தை நிதி சிக்கலில் இருந்து மீட்க அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. சிறப்பு அதிகாரியாக சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார்.

குறிப்பாக, பல்கலையில் இருந்து பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிப்படியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு அயல் பணிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழகத்தில் தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டபோது சரியான கல்வித்தகுதி இல்லாமல், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் பணி புரிவது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உயர்கல்வித்துறைக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நேற்று, சரியான கல்வி தகுதி இல்லாமல் உதவி பேராசிரியர்களாக பணியாற்றும் 56 பேரை, பணியில் இருந்து நீக்கி, தமிழக உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 100 க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது.

உதவி பேராசிரியர்கள் நீக்கப்பட்ட நடவடிக்கை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கல்வி தகுதி இல்லாமல் பணி புரிந்ததாக, 56 உதவி பேராசிரியர்களை, உயர்கல்வித்துறை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது. கடலுார் மாவட்டம்

மூலக்கதை