எச்சரிக்கை பலகை வைக்காததால் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிப்பு

தினமலர்  தினமலர்
எச்சரிக்கை பலகை வைக்காததால் வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவிப்புமரக்காணம்: மரக்காணம் அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்காததால் பலர் வெள்ளத்தில் சிக்கி மீண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த காணிமேடு, -மண்டகப்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மரக்காணம் பகுதிக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பவர்கள் இந்த பகுதிக்கு வர ஓங்கூர் ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்து வரவேண்டும்.

மழை காலங்களில் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கும் போது அந்த பகுதியில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் வெளியில் வரமுடியாமல் நாட்கணக்கில் ஊரிலேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் காணிமேடு, மண்டகப்பட்டு பகுதியில் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றது. பாலம் கட்டும் பணிக்காக ஆங்காங்கே பள்ளங்கல் தோண்டப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்கின்றது.

காணிமேடு, மண்டகப்பட்டு, வெள்ளகொண்டஅகரம், புதுப்பேட்டை உள்ளிட்ட 5- க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மரக்காணம், திண்டிவனம், புதுச்சேரி செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.

சிலர் அவசரதேவைக்காக ஆற்றில் செல்லும் தண்ணீரையும் பொருட்படுத்தாமல் வருகின்றனர். அப்பொழுது புதிய பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்திற்கு மேல் வெள்ளம் செல்வதால் பள்ளம் தெரியாமல் சிலர் வெள்ளத்தில் சிக்கி மீண்டு செல்கின்றனர்.

கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் பள்ளம் இருக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகை வைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருந்திருக்கும்.

பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் சம்பந்தபட்டவர்கள் பள்ளம் உள்ள இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரக்காணம்: மரக்காணம் அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்காததால் பலர் வெள்ளத்தில் சிக்கி மீண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்

மூலக்கதை