ஏற்றத்தாழ்வை ஒழிக்க உதயநிதி முன்வருவாரா?

தினமலர்  தினமலர்
ஏற்றத்தாழ்வை ஒழிக்க உதயநிதி முன்வருவாரா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


ஆர். விஸ்வநாதன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சனாதன தர்மம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்களைப் படித்தேன். சமுதாய ஏற்றத்தாழ்வுகள் குறித்த ஒரு விவாதத்தை துவக்கி வைத்திருக்கிறார். அதற்கு முதலில் என் நன்றி!

உதயநிதி கூறும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை, ஜாதி மற்றும் பொருளாதாரம் என, இரு வகைகளாக பிரிக்கலாம். ஜாதி ஏற்றத்தாழ்வுகள் பல காலமாக இருந்து வருகின்றன. இதை முற்றிலும் ஒழிப்பது மிகவும் கடினமான, நீண்ட காலம் போராட வேண்டிய யுத்தம்; ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை முழுதும் களைய முடியா விட்டாலும், முயற்சி செய்தால் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம். பொருளாதார ஏற்றத்தாழ்வு உலகமெங்கும் உள்ள ஒரு பெரும் வியாதி. உலக பொருளாதாரம் எவ்வளவு உயர்ந்தாலும், ஏழ்மை மட்டும் குறைவதில்லை.

ஒரு கணக்கெடுக்கின்படி, இந்தியாவின் பெரும்பான்மை செல்வம், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேரிடமே இருக்கிறது; தமிழகத்திலும் இதே கதிதான். தனி நபர் வருமானம் கூடினாலும் இன்னும், 2 கோடி மக்கள் வறுமையில் தான் வாழ்கின்றனர். சமீபத்தில் மகளிர் உரிமைத் தொகைக்காக, தமிழக அரசு எடுத்த ஒரு கணக்கெடுப்பே இதற்கு சான்று!

எனவே, உதயநிதி உண்மையிலேயே சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க விரும்பினால், முதலில் தமிழகத்தில் ஏழ்மையை ஒழிக்க புரட்சி செய்யட்டும். தன் குடும்பத்தாரின், தன் கட்சியின் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் சொத்துக்களில் ஒரு பகுதியையாவது ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும். அதை வைத்து, தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு வீடுகள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், சாலைகள், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கட்டும்.

இதை செய்தால், அவரை ஒரு உண்மையான புரட்சியாளராக சமுதாயம் ஏற்றுக் கொள்ளும். ஜாதி, மதம், இனம் பாராமல் தமிழகத்தின் பல கோடி மக்கள் அவர் பின் நிற்பதற்கு தயாராய் இருப்பர்; அவரது பெயரும் சரித்திரத்தில் இடம் பெறும்.

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:ஆர். விஸ்வநாதன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சனாதன தர்மம் பற்றிய அமைச்சர்

மூலக்கதை