கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

தினமலர்  தினமலர்
கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து, கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், ராம்நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மாண்டியாவில், பெங்களூரு - தேசிய நெடுஞ்சாலை; சாம்ராஜ் நகரில் மைசூரு - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மைசூரு காவிரி நீர் வாரிய அலுவலகம் முன் போராட்டம் நடத்திய விவசாயிகள், அங்கேயே, 'பஜ்ஜி' செய்து சாப்பிட்டனர். பெங்களூரு சுதந்திர பூங்காவில் கன்னட அமைப்பினரும் போராட்டம் நடத்தினர். பி.எம்.டி.சி., பஸ்கள் முன் படுத்து போராட்டம் நடத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கே.ஆர்.எஸ்., அணையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

மாண்டியா விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், நாளை மாவட்டத்தில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாய சங்கங்களுக்கும் ஆதரவு தரும்படி கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது, 'தமிழகத்துக்கு திறந்து விடுவதற்கு கர்நாடகாவிடம் தண்ணீர் இல்லை. இதை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் விளக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டித்து, கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், ராம்நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று விவசாயிகள் போராட்டம்

மூலக்கதை