பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத வைகை அணை பூங்கா ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

தினமலர்  தினமலர்
பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத வைகை அணை பூங்கா ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்ஆண்டிபட்டி,- -தேனி மாவட்டம் வைகை அணை பூங்காவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத வைகை அணை பூங்காவால், ஆசையோடு சுற்றுலா வரும் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

வைகை அணை கட்டுமான பணியின் போது திட்ட மதிப்பீட்டில் எஞ்சிய தொகை ரூ.3.30 லட்சத்தில் உருவாக்கப்பட்டது வைகை அணையின் வலது, இடது கரைகளில் உள்ள பூங்காக்கள். எம்.ஜி.ஆர்., நடித்த மாட்டுக்கார வேலன் உள்ளிட்ட பல திரைப்படங்களின் காட்சிகள் வைகை அணை பூங்காவில் உருவாக்கப்பட்ட பின் தமிழகம் முழுவதும் வைகை அணை பூங்கா பிரபலமாகி விட்டது.

வைகை அணை பூங்கா பராமரிப்புக்கு சுற்றுலாத்துறை, நீர்பாசனத்துறை மூலம் ஆண்டு தோறும் சிறப்பு நிதி ஒதுக்கப்படுவது இல்லை. பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் குறைவான நிதியால் பூங்காவின் நிலை ஆண்டுதோறும் கவலைக்கிடமாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகளை 'குஷி'ப்படுத்துவதற்காக இயக்கப்படும் மாதிரி ரயில், இசை நடன நீரூற்று, படகு குழாம் ஆகியவை அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே செயல்படுகிறது.

தொலை தூரத்தில் இருந்து மற்ற நாட்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். வைகை அணை பூங்காவின் நிலை குறித்து சுற்றுலா பயணிகள் கூறியதாவது:

கூடுதல் பணியாளர்கள் அவசியம்ஆர்.பாபு, கொடைக்கானல்: டாக்சி டிரைவராக உள்ள நான் தமிழகத்தின் பல இடங்களுக்கும் சுற்றுலா சென்று வந்துள்ளேன்.

மிகச் சிறப்பான நிலையில் இருந்த வைகை அணை பூங்கா, தற்போது பராமரிப்பு இல்லாததால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. பூங்கா முழுவதும் குப்பை குவிந்து கிடக்கிறது.

தண்ணீர் பற்றாக்குறையால் மரம், செடி கொடிகள் வளர்ச்சி பாதித்துள்ளன. பூங்காவில் அமர்ந்து ரசிப்பதற்கான இட வசதிகள் இல்லை. சுற்றுலா பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் சேதம் அடைந்து மறு சீரமைப்பு இல்லை.

வைகை அணை பூங்கா முழுவதையும் சுற்றி பார்க்க ஒரு நாள் தேவைப்படும். வலது இடது கரைகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பூங்காக்களின் நிலையால் சுற்றுலா பயணிகளுக்கு ரசிக்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. பூங்காவில் கூடுதலான பணியாளர்களை நியமித்து பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்திற்கான புதிய அம்சங்களை பூங்காவில் ஏற்படுத்த வேண்டும்.

பூங்காவின் பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரித்து நுழைவுக் கட்டணத்தை உயர்த்தினாலும் சுற்றுலா பயணிகள் ஏற்றுக் கொள்வர். தமிழகம் முழுவதும் பிரபலமான வைகை அணை பூங்காவை மேம்படுத்த அவசிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்., என்றார்.

சிலைகள் பராமரிப்பு இல்லைஎம்.சிவலிங்கம், கோவை: பூங்காவின் நடைபாதையின் இருபுறமும் ரசிக்கும் படியான புல்வெளிகள், பூச்செடிகள், மரங்கள் அதிக அளவில் நடப்பட வேண்டும். பூங்காவிற்கான தண்ணீர் குழாய்கள் அனைத்தும் உடைந்ததால் நீர் வரத்தின்றி காய்ந்து கிடக்கிறது.

பூங்காவில் அதிக கடைகள் உள்ளது. பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. செயல்படும் கடைகளால் தான் பூங்காவில் குப்பை அதிகமாகிறது. குவியும் குப்பைக்கு கடைக்காரர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

பூங்காவின் பல இடங்களில் அழகான சிலைகள் உள்ளன. பராமரிப்பு இல்லை. மாலை 6:00 மணிக்கு மேல் இருளில் மூழ்கி விடுகிறது.

பூங்காவில் விளக்கு வசதிகள் இல்லை. கடந்த காலங்களில் இரவு 8:00 மணி வரை வண்ண விளக்குகளால் பூங்கா முழுவதும் ஒளிர்ந்தது.

அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக பழைய அம்சங்கள் மட்டுமே பூங்காவில் உள்ளன. சுற்றுலா பயணிகள் ரசிக்கும் படியான புதிய அம்சங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பூங்கா முழுவதும் பசுமையானால் அழகு தானாக கூடிவிடும்.', என்றார்.

ஆண்டிபட்டி,- -தேனி மாவட்டம் வைகை அணை பூங்காவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத வைகை அணை பூங்காவால்,

மூலக்கதை