'குர்மி' போராட்டம் எதிரொலி ஜார்க்கண்டில் ரயில்கள் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஞ்சி :ரயில் மறியல் போராட்டத்துக்கு 'குர்மி' அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளதால், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், 11 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, டோட்டெமிக் குர்மி விகாஸ் மோர்ச்சா உள்ளிட்ட குர்மி அமைப்புகள், தங்கள் சமூகத்துக்கு பழங்குடியின அந்தஸ்து கேட்டும், குர்மலி மொழியை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கவும் நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு, குர்மி அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இதன்படி ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், ஒன்பது ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடக்க உள்ளது.
இது குறித்து, டோட்டெமிக் குர்மி விகாஸ் மோர்ச்சா அமைப்பின் தலைவர் ஷீத்தல் ஓதார் கூறியதாவது:
ஜார்க்கண்டில் முரி, கோமோ, நிம்தி, காக்ரா; மேற்கு வங்கத்தில், கெமசுலி, குஸ்தார்; ஒடிசாவில் ஹரிசந்தன்பூர், ஜரைகேலா மற்றும் தன்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று முதல் ரயில் மறியல் போராட்டம் நடக்கும்.
இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில், 11 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழித்தடங்களில் செல்ல வேண்டிய ரயில்கள், மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
ராஞ்சி :ரயில் மறியல் போராட்டத்துக்கு 'குர்மி' அமைப்புகள் அழைப்பு விடுத்து உள்ளதால், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில், 11 விரைவு ரயில்கள் ரத்து
மூலக்கதை
