மகளிர் இட ஒதுக்கீடு மசோதா புதிய பார்லி.,யில் தாக்கல்!

தினமலர்  தினமலர்
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா புதிய பார்லி.,யில் தாக்கல்!

புதுடில்லி,மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வட்ட வடிவிலான பழைய கட்டடத்துக்கு விடைகொடுத்து, அதன் அருகே கட்டப்பட்டுள்ள முக்கோண வடிவிலான கட்டடத்தில், புதிய பார்லிமென்டின் பணிகள் நேற்று துவங்கின.

பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கியது. ஐந்து நாட்கள் நடக்கும் இந்த கூட்டத்தொடர், பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

கடந்த, 1948ல் நிறுவப்பட்ட பார்லிமென்ட் அமைந்ததன், 75வது ஆண்டு பயணத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், எம்.பி.,க்கள் பார்லிமென்டின் வரலாறு, அதன் சிறப்புகள் மற்றும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

முதல் மசோதா



விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று, புதிய பார்லிமென்டில் சிறப்புக் கூட்டத் தொடர் தொடர்ந்து நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, பிரதமர் மோடி மற்றும் மூத்த அமைச்சர்கள், பழைய பார்லிமென்ட் கட்டடத்தில் இருந்து, புதிய பார்லிமென்ட் கட்டடத்துக்கு நேற்று நடந்து சென்றனர்.

இதைத் தொடர்ந்து, புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் இரண்டு சபைகளிலும் பணிகள் நேற்று துவங்கின. புதிய பார்லிமென்டில் முதல் மசோதாவாக, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 1989ல் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டது.

காங்.,கின் ராஜிவ் பிரதமராக இருந்தபோது, பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கலானது. லோக்சபாவில் நிறைவேறிய இந்த மசோதா, ராஜ்யசபாவில் தோல்வியடைந்தது.

காங்.,கின் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 1993ல் இரண்டு சபைகளிலும் நிறைவேறி, சட்டமானது.

நிறைவேறியது



இதைத் தொடர்ந்து, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 1996ல் இருந்து பலமுறை முயற்சிக்கப்பட்டது. கடைசியாக, 2010ல், இதற்கான மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. ஆனால் லோக்சபாவில் நிறைவேறவில்லை.

புள்ளி விபரங்களின்படி, தற்போது லோக்சபாவின் மொத்த உறுப்பினர்களில், 15 சதவீதம் பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர். அதே நேரத்தில் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம், 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

128வது திருத்தம்



இந்த சூழ்நிலையில், 27 ஆண்டுக்குப் பின், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின், 128வது திருத்தம் என்ற இந்த மசோதாவை, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார்.

இந்த வரைவு மசோதாவுக்கு, பெண்சக்தியை வணங்கும் சட்டம் என்று பொருள்படும், 'நாரிசக்தி வந்தன் அதீனியம்' என, பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன், லோக்சபாவில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். இதற்காகபெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் பல உன்னதான பணிகளை செய்வதற்காக, கடவுள் என்னை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் சிறந்த நோக்கத்துடன் இந்த அரசு மீண்டும் செயல்பட்டுள்ளது,'' என, குறிப்பிட்டார்.

ராஜ்யசபாவில் நடந்த விவாதத்தின்போது, ''இந்த மசோதாவை ஒருமனதுடன் நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்,'' என, அவர் வலியுறுத்தினார்.

'மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே, இடஒதுக்கீடு அமலுக்கு வரும்' என, மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதனால், அடுத்தாண்டு ஏப்., - மே மாதங்களில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் இந்த இடஒதுக்கீடு அமலுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், 2029ல் நடைமுறைக்கு வரலாம் என, கூறப்படுகிறது. மேலும், நாட்டின், 50 சதவீத சட்டசபைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும்.

இந்த மசோதாவுக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில், அரசியல் நோக்கத்துக்காக, லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, தன் பதவி காலத்தின் கடைசி கட்டத்தில் இந்த மசோதாவை பா.ஜ., தாக்கல் செய்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த மசோதாவின் தாக்கலுக்குப் பின், லோக்சபா நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று இந்த மசோதா மீது விவாதம் நடக்கும் என தெரிகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், 'இந்த மசோதா எங்களுடையது. எங்களால் உருவாக்கப்பட்டது' என, குறிப்பிட்டுள்ளார்.

எண்ணிக்கை உயரும்!



லோக்சபாவில் தற்போது, 81 பெண் எம்.பி.,க்கள் உள்ளனர். மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் இந்த மசோதா நிறைவேறி, நடைமுறைக்கு வரும்போது, லோக்சபாவில் பெண்களின் எண்ணிக்கை, 181ஆக உயரும்.அர்ஜுன் ராம் மெஹ்வால் மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,


பார்லிமென்டில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்து வந்த பாதை 1989 கிராம, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா லோக்சபாவில் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் நிறைவேற்ற முடியவில்லை 1992, 1993 உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது 1996 செப்., 12 பார்லிமென்டில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதா லோக்சபாவில் அறிமுகமானது. கீதா முகர்ஜி தலைமையிலான பார்லிமென்ட் கூட்டு கமிட்டிக்கு அனுப்ப வலியுறுத்தப்பட்டது. அக்கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் மசோதாவுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் நிறைவேறவில்லை.

1998 வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணிஆட்சியில் இந்த சட்ட மசோதா அறிமுகமானது. ஆனால் நிறைவேறவில்லை. தொடர்ந்து, 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் மசோதா தாக்கலாகி நிறைவேறவில்லை.

2008 மே 6 இச்சட்ட மசோதா மீண்டும் அறிமுகமாகி பார்லிமென்ட் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது .

2009 டிச., 17 நிலைக்குழு தன் அறிக்கையை தாக்கல் செய்தது .

2010 மார்ச் 9 ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறியது. ஆனால், லோக்சபாவில் நிறைவேறவில்லை .

2023 செப்., 19 13 ஆண்டுகளுக்குப் பின் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தாக்கலானது.

பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 30 ஆண்டுகளுக்கு மேலான இழுபறிக்குப் பின், தற்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான மசோதா, நடப்பு பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த மசோதா சட்டமானாலும், அடுத்து வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் நடைமுறைக்கு வராது. தற்போதைய சூழ்நிலையில், 2029ல்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறு பக்கங்கள் உள்ள, 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்

:* லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கான நேரடி தேர்தல்களில், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்* அதே நேரத்தில் ராஜ்யசபா மற்றும் சட்ட மேலவைகளுக்கு இது பொருந்தாது

* இந்த இட ஒதுக்கீட்டில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு மூன்றில் ஒரு பங்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும்* ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப் பிரிவினருக்கு சட்டசபைகளில் ஒதுக்கீடு கிடையாது. இதனால், இந்த உள் ஒதுக்கீட்டில், இந்த பிரிவினர் சேர்க்கப்படவில்லை. சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இந்த ஒரு காரணத்துக்காகவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து வந்தன.

* கடந்த, 2010ல் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இடம்பெற்றிருந்த, ஆங்கிலோ -- இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு, தற்போதைய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது.

* மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், ஒவ்வொரு தொகுதி மறுவரையின்போதும், சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும்* மேலும் தற்போதைய நிலையில், 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா நடைமுறையில் இருக்கும். அதன்பின், மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும்.

* அரசியலமைப்பு சட்டத்தின், 82வது பிரிவு, 2002ல் திருத்தப்பட்டது. இதன்படி, நாடு முழுதும் தொகுதி மறுவரையறை, 2026க்குப் பின் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இதன்படி பார்த்தால், 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே, இடஒதுக்கீடு அமலுக்கு வர வேண்டும்.

* ஆனால், 2021ல் மேற்கொள்ள வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 2027ல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்.

* அதன்பின், தொகுதி மறுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2029ல் இருந்து, மகளிர் இடஒதுக்கீடு, நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

கடந்த, 2009ல், மகளிர் இடஒதுக்கீடு மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டபோது, சமீபத்தில் மறைந்த, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, சமாஜ்வாதி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்தது.'இந்த மசோதா கடுமையாக உழைக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிரானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், தலித்களுக்கு இடஒதுக்கீடு அளிக்காத இந்த மசோதாவை, அரசியல் கட்சிகளுக்கு எதிரான சதியாகவே பார்க்கிறோம்' என, முலாயம் சிங் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தள தலைவராக இருந்த சரத் யாதவும் அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குறித்து, சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி நேற்று கூறியதாவது:நாங்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை வரவேற்கிறோம்.அதே நேரத்தில், காங்கிரஸ் ஆட்சியின்போது, நாங்கள் கூறிய சந்தேகங்களுக்கு தற்போது தாக்கல் செய்துள்ள மசோதாவிலும் பதில் இல்லை. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், தலித்களுக்கு இட ஒதுக்கீடு இதில் இல்லை. இதை எப்படி ஆதரிப்பது.இவ்வாறு அவர் கூறினார்.



புதுடில்லி,மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்த, லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் நேற்று தாக்கல்

மூலக்கதை