சாலையில் சாகசம் செய்து விபத்து : டிடிஎப் வாசன் கைது

தினமலர்  தினமலர்
சாலையில் சாகசம் செய்து விபத்து : டிடிஎப் வாசன் கைது

காஞ்சிபுரம் : கோவையைச் சேர்ந்தவர் 'யூடியூபர்' டிடிஎப். வாசன், 22. இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று சாகசம் செய்து யூடியூப்பில் பதிவு செய்து பிரபலமானவர். தற்போது ‛மஞ்சள் வீரன்' என்ற படத்தில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து ஓசூருக்கு, 'யாயாபூசா' என்ற இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் செல்லும் போது முன் சக்கரத்தை தூக்கி 'வீலிங்' செய்துள்ளார். அப்போது நிலை தடுமாறி தூக்கி வீசப்பட்டார்.

பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அடுத்த தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மேல் சிகிச்சைக்காக, சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தலைக்கவசம் மற்றும் உயிர் காக்கும் உடைகள் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார். இருப்பினும் அவர் கை, கால்களில் காயமடைந்து கட்டு போடும் அளவுக்கு சென்றுள்ளது.

வாசன் தொடர்ந்து இதுபோன்று ஆபத்தான முறையில் பைக்கில் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. நேற்று காயமடைந்த நிலையில் வாசனின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்து வந்தனர். நேற்றுமுன்தினம் நடந்த விபத்து தொடர்பாக வாசன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சாலை விதிகளை மீறி ஆபத்தான முறையில் பைக் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காஞ்சிபுரம் போலீசார் வாசனை கைது செய்தனர். கையில் கட்டுடன் போலீசார் அவரை கைது செய்த வீடியோக்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை