லக்னோவுக்கு எதிராக 'ரிட்டயர்டு அவுட்'... மவுனம் கலைத்த திலக் வர்மா

  தினத்தந்தி
லக்னோவுக்கு எதிராக ரிட்டயர்டு அவுட்... மவுனம் கலைத்த திலக் வர்மா

புதுடெல்லி,ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 67 ரன் எடுத்தார். இந்த ஆட்டத்தில் மும்பை வீரர் திலக் வர்மா ரன்கள் எடுக்க மிகவும் சிரமப்பட்டார்.இதன் காரணமாக அவர் 23 பந்தில் 25 ரன் எடுத்திருந்த போது 'ரிட்டயர்டு அவுட்' ஆகி வெளியேறினார். இந்த முடிவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் தங்களது கருத்துகளை வெளியிட்டு வந்தனர். இதற்கு விளக்கம் அளித்த மும்பை கேப்டன் பாண்ட்யா, எங்களுக்கு இறுதியில் பெரிய ஷாட்கள் தேவைப்பட்டது. கிரிக்கெட்டில் இதுபோன்று சில நாட்கள் வரும் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது நடக்காது. நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும். நான் அதை எளிமையாக வைத்திருக்க விரும்புகிறேன் என்றார். இந்நிலையில், ரிட்டயர்டு அவுட் விவகாரம் குறித்து எதுவும் பேசமால் இருந்த திலக் வர்மா, தற்போது அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் அந்தப் போட்டியில் 'ரிட்டயர்டு அவுட்' செய்யப்பட்டது குறித்து பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. அவர்கள் அணியின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று நேர்மறையான வழியிலேயே அந்த முடிவை எடுத்துக் கொண்டேன். அதனை நான் எந்த விதத்திலும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ளவில்லை. உங்களுக்கு இது போன்று ஒரு விஷயம் நடக்கும் போது நீங்கள் அதனை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது தான் மிகவும் முக்கியம். அதனால் நான் இதனை இப்படித்தான் யோசித்து எடுத்துக் கொண்டேன். நான் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறங்கினாலும் சவுகரியமாகவே இருக்க விரும்புகிறேன். அதனால்தான் அணியின் பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் நீங்கள் எந்த வரிசையில் என்னை அனுப்பினாலும் பரவாயில்லை, நான் அதற்கு ஏற்றவாறு சவுகரியமான வகையில் என்னால் முடிந்ததை செய்வேன் என்று கூறி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை