ஐ.பி.எல். மெகா ஏலம்; 10 கோடி வரை கொடுக்க தயார் என்றனர் ஆனால்... - ரமன்தீப் சிங்

  தினத்தந்தி
ஐ.பி.எல். மெகா ஏலம்; 10 கோடி வரை கொடுக்க தயார் என்றனர் ஆனால்...  ரமன்தீப் சிங்

முல்லன்பூர், 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் முல்லன்பூரில் இன்று நடைபெற்று வரும் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.நடப்பு ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் கொல்கத்தா அணி ரமன்தீப் சிங்கை ரூ.4 கோடிக்கு (ரீடெய்ன்) தக்கவைத்தது. இளம் ஆல் ரவுண்டரனான அவரை நீண்ட கால பிளேயராக கருத்தில் கொண்டு கொல்கத்தா தக்கவைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் முடிவடைந்த கையோடு தன்னை 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்க மற்ற அணிகள் அணுகியதாகவும் ஆனால் கே.கே.ஆர் அணியின் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக தான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டதாகவும் ரமன்தீப் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு மெகா ஏலத்திற்கு முன்னதாக எனக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் ரிட்டன்ஷனுக்கு ஒப்புக்கொள்ள வேண்டாம் என்று கோரிக்கைகள் வந்தன. மேலும் நான் மெகா ஏலத்திற்கு வந்தால் 10 கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக உள்ளோம் என்றும் கூறினர்.ஆனாலும், நான் பணத்தை விட கே.கே.ஆர் அணியின் மீது வைத்துள்ள விசுவாசம் தான் முக்கியம் என்று நினைத்தேன். ஏனெனில், எனக்கு தேவையான நேரத்தில் மிகப்பெரிய இடத்தை கொடுத்தது கே.கே.ஆர் அணி தான். கே.கே.ஆர் அணியால்தான் தற்போது நான் ஒரு மிகச் சிறந்த வீரராக மாறி எனது வாய்ப்பில் நிலைத்து நின்று விளையாடி வருகிறேன்.எனவே, பணத்தைவிட அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையும், கொடுத்த ஆதரவும் தான் எனக்கு முக்கியம் என்று கே.கே.ஆர் அணியிலேயே இருக்க ஒப்புக்கொண்டேன். அந்த வகையிலேயே கே.கே.ஆர் அணி நிர்வாகிகளும் மெகா ஏலத்திற்கு முன்னதாகவே என்னை 4 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை