பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்: 3 போலீசார் பலி; 16 பேர் காயம்

  தினத்தந்தி
பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்: 3 போலீசார் பலி; 16 பேர் காயம்

பலூசிஸ்தான்,பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் மஸ்துங் மாவட்டத்தில் தஷ்த் சாலையில் காவல் துறை அதிகாரிகளை ஏற்றியபடி வாகனம் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, அவர்களை இலக்காக கொண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது.பணியை முடித்து விட்டு 40 பேர் கொண்ட போலீசாரை ஏற்றியபடி வந்த வாகனம் மீது நடந்த இந்த தாக்குதலில் 3 போலீசார் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இதில், 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பலூசிஸ்தான் தேசிய கட்சி-மெங்கல் என்ற கட்சியானது, போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டம் 19-வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.பலூச் தன்னார்வலர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. இதில், 2-வது நாள் போராட்டத்தின்போது, அந்த கட்சியின் தலைவர் சர்தார் அக்தர் மெங்கல் மீது தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில் இருந்து அதிர்ஷ்டவசத்தில் அவர் உயிர் தப்பினார்.இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கையாள்வதற்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பணியை முடித்து கொண்டு திரும்பி வந்தபோது, அவர்களுடைய வாகனம் மீது இந்த தாக்குதல் நடந்துள்ளது. எனினும், இந்த தாக்குதல் ஆனது, நடந்து வரும் போராட்டத்துடன் நேரடி தொடர்புடைய ஒன்றா? என்பது பற்றிய விவரங்கள் எதனையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவில்லை. எனினும், சமீப நாட்களாக பயங்கரவாத குழுக்களின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.

மூலக்கதை