'தமிழ் புத்தாண்டில் மீண்டும் கர்ஜனை' சென்னை அணியின் வெற்றி குறித்து இந்திய முன்னாள் வீரர்

  தினத்தந்தி
தமிழ் புத்தாண்டில் மீண்டும் கர்ஜனை சென்னை அணியின் வெற்றி குறித்து இந்திய முன்னாள் வீரர்

சென்னை, ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷிவம் துபே 43 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் சென்னை அணி மிடில் வரிசையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது 6-வது விக்கெட்டுக்கு இம்பேக்ட் வீரர் ஷிவம் துபேவுடன் கேப்டன் தோனி கூட்டணி அமைத்தார். இதில் அதிரடியாக விளையாடிய தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்றிருந்த சென்னை அணி ஒரு வழியாக வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது. அதுவும் தமிழ் புத்தாண்டு அன்று (நேற்று, ஏப்ரல் 14-ம் தேதி) வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் இந்த வெற்றி குறித்தும், தோனி குறித்தும் இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "சென்னைக்கு என்ன ஒரு வெற்றி! தோனி தன்னை ஏன் தல என்று அழைக்கிறார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். அவரது செயல்திறனுக்காக மட்டுமல்ல, அவர் தனது அணியை அமைதியாகவும், கட்டளையிடும் விதமாகவும் வழிநடத்தினார். இது வெறும் வெற்றி அல்ல... இது ஒரு மறுமலர்ச்சியின் தொடக்கமாக உணர்கிறேன். தமிழ் புத்தாண்டில் மீண்டும் கர்ஜனை!" என்று பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை