வக்புக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரம்: கேரளாவில் ரிஜிஜு பேட்டி

  தினத்தந்தி
வக்புக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரம்: கேரளாவில் ரிஜிஜு பேட்டி

கொச்சி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்டம் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. அது விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்துள்ள மத்திய நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு, வக்பு சட்டம் பற்றி பேட்டியளித்து உள்ளார். அவர் கூறும்போது, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் உணர்வுப்பூர்வ விவகாரத்திற்காக நான் வந்துள்ளேன். நிலம் நமக்கு விலை மதிப்பில்லா விசயம். நிலம் இழந்து விட்டால், நீங்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவீர்கள். அதனாலேயே, எந்த விதத்திலும், யாரும் கட்டாயப்படுத்தி மற்றும் ஒருதரப்பாக மற்றொருவரின் நிலங்களை எடுத்து கொள்வதற்கு எந்தவொரு பிரிவும் இந்தியாவில் இருக்க கூடாது என்று நாங்கள் நினைத்தோம். சரியான உரிமையாளரின் ஒவ்வோர் அங்குல நிலமும் பாதுகாக்கப்படும் வகையிலான சட்டங்களை நாம் உருவாக்க வேண்டும் என்றார். நாங்கள் முன்பு போலவே, இந்த சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்தோம். வக்புக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது முஸ்லிம்களை இலக்காக கொள்ளப்பட்டதன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது என கூறப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையல்ல. கடந்த கால தவறுகளை திருத்தியமைப்பதற்காகவே நாங்கள் இருக்கிறோம். மக்களுக்கு நீதியை வழங்குவதற்காகவும் இருக்கிறோம் என கூறியுள்ளார்.

மூலக்கதை