கோவாவில் அதிர்ச்சி.. வரலாறு காணாத போதைப்பொருள் பறிமுதல்: இத்தனை கோடியா...?

  தினத்தந்தி
கோவாவில் அதிர்ச்சி.. வரலாறு காணாத போதைப்பொருள் பறிமுதல்: இத்தனை கோடியா...?

பனாஜி, கோவாவின் வரலாற்றில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதன்படி சாக்லேட்டுகள் மற்றும் காபி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.43 கோடி மதிப்புள்ள 4 கிலோ கோகைனை போலீசார் மீட்டனர், இந்த சம்பவம் தொடர்பாக, மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் சர்வதேச தொடர்புகள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் (குற்றப்பிரிவு) ராகுல் குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், "4.32 கிலோ கோகைன், 32 சாக்லேட் மற்றும் காபி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. தெற்கு கோவாவின் சிகலிம் கிராமத்தில் கோகைன் வைத்திருந்ததற்காக கணவன்-மனைவி இருவரும், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர். இது கோவாவில் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவமாகும்இந்த பெரிய அளவிலான போதைப்பொருட்களின் தொடக்கம் எங்கிருந்து உருவானது என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். கைது செய்யப்பட்ட அந்தப் பெண் சமீபத்தில் தாய்லாந்துக்குச் சென்றிருந்ததால், சர்வதேச கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். ஏற்கனவே விபச்சார வழக்கில் அந்தப் பெண் மூன்று மாத சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார். அவரது கணவருக்கும் குற்றப் பின்னணி இருக்கிறது" என்று அவர் கூறினார்.இந்த பறிமுதல் சம்பவம் குறித்து அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தனது எக்ஸ் வலைதளத்தில், "மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில் பாராட்டத்தக்க முயற்சிகள் மற்றும் விரைவான நடவடிக்கைக்காக கோவா போலீசார் மற்றும் குற்றப் பிரிவுக்கு பாராட்டுகள். ரூ.43.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருப்பதாக குறிப்பிட்ட உளவுத்துறையின் அடிப்படையில் மூன்று நபர்கள் குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று பதிவிட்டிருந்தார்.

மூலக்கதை