ஐ.சி.சி. என்றால் இந்திய கிரிக்கெட் வாரியம்தான் - வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் விளாசல்

துபாய், 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முதலில் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.ஆனால் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடி கோப்பையை வென்று விட்டதாக பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். இருப்பினும் அதற்கெல்லாம் கவலைப்படாத இந்திய அணி களத்தில் நன்றாக செயல்பட்டு கோப்பையை வென்றது. இந்நிலையில் ஐ.சி.சி. என்றால் இப்போதெல்லாம் இந்தியா என்ற நிலைமை ஆகிவிட்டதாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் ஆண்டி ராபர்ட்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "எதையாவது செய்யலாம். ஆனால் இந்தியா அனைத்தையும் பெற முடியாது. ஐ.சி.சி. இந்தியாவுக்கு சில நேரங்களில் இல்லை என்று சொல்ல வேண்டும். கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையிலும் தங்களது அரையிறுதி போட்டியை எங்கே விளையாடுவோம் என்று தெரிந்த காரணத்தால் இந்தியா சாதகத்தை பெற்றிருந்தனர். தற்போது சாம்பியன்ஸ் டிராபியில் அவர்கள் எங்கேயும் பயணிக்கவில்லை. ஒரு அணியால் எப்படி ஐசிசி தொடரில் பயணிக்காமல் விளையாட முடியும். இது நியாயமற்றது. இது கிரிக்கெட் அல்ல. இந்தியாவிலிருந்து நிறைய பணம் வருகிறது என்று எனக்குத் தெரியும். அதற்காக கிரிக்கெட் என்பது ஒரு நாட்டுக்காக விளையாடப்படும் விளையாட்டாக இருக்கக்கூடாது. தற்போது அது ஒரு நாட்டு விளையாட்டு போல தெரிகிறது. களத்தில் அனைத்தும் சமமாக விளையாடப்படவில்லை. என்னைப் பொறுத்த வரை ஐ.சி.சி. என்றால் இந்திய கிரிக்கெட் வாரியமாகும். இந்தியா அனைத்தையும் நடத்துகிறது. ஒருவேளை இந்தியா நாளை வைடு, நோ-பால் வேண்டாம் என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது இந்தியாவை திருப்திப்படுத்த அதையும் ஐ.சி.சி. செய்யும்" என்று கூறினார்.
மூலக்கதை
