அது மட்டும் நடந்து விட்டால் பும்ராவின் கெரியர் முடிந்தது - நியூசிலாந்து முன்னாள் வீரர் எச்சரிக்கை

வெலிங்டன்,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா தற்போது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் கடைசி போட்டியில் காயத்தை சந்தித்த அவர், அதிலிருந்து மீளாததால் சாம்பியன்ஸ் டிராபியில் களமிறங்கவில்லை. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை நேரில் கண்டு களித்ததுடன், சக வீரர்களையும் உற்சாகப்படுத்தினார்.தற்போது காயத்திலிருந்து குணமடைந்து வரும் அவர் பெங்களூருவில் பி.சி.சி.ஐ.யின் மருத்துவக்குழுவின் கண்காணிப்பின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் அவர் இன்னும் முழு உடற் தகுதியை எட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் மீண்டும் அதே இடத்தில் ஏற்பட்டால் நிச்சயம் அவரது கெரியர் முடிவுக்கு வரும் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஷேன் பாண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில், "சிட்னி டெஸ்ட் போட்டியின்போது ஸ்கேனுக்கு சென்ற அவருக்கு மீண்டும் அதே இடத்தில் (முதுகு பகுதியில்) காயம் ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் ஏற்கனவே ஒரு இடத்தில் ஏற்பட்ட காயம் மீண்டும் அதே இடத்தில் ஏற்படுமாயின் நிச்சயம் அங்கு சில அசவுகரியங்கள் இருக்கும். அதன் காரணமாக அதே இடத்தில் காயமடைந்தால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற மாட்டார் என கணித்திருந்தேன். நான் நினைத்த படியே நடந்தது. என்னை பொறுத்தவரை பும்ரா மீண்டும் அதே இடத்தில் காயமடைந்து மற்றொரு அறுவை சிகிச்சை நடந்தால் அவரது கிரிக்கெட் கெரியர் முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரே இடத்தில் இருமுறை அறுவை சிகிச்சை செய்யக்கூடாது அப்படி செய்தால் அந்த காயத்திலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். எனவே அவரது பணிச்சுமையை இந்திய கிரிக்கெட் வாரியம் கவனிக்க வேண்டும். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இருந்தால் 2 போட்டிகளுக்கு மேல் அவரை விளையாட வைக்க கூடாது. ஏனெனில் அடுத்த உலகக்கோப்பைக்கு அவர் முக்கியம்" என்று கூறினார்.
மூலக்கதை
