உ.பி.: 24 பேர் படுகொலை வழக்கில் 40 ஆண்டுகளுக்கு பின்பு 3 பேர் குற்றவாளி என அறிவிப்பு

  தினத்தந்தி
உ.பி.: 24 பேர் படுகொலை வழக்கில் 40 ஆண்டுகளுக்கு பின்பு 3 பேர் குற்றவாளி என அறிவிப்பு

மெயின்புரி,உத்தர பிரதேசத்தின் மெயின்புரி மாவட்டத்தில் திகுலி கிராமத்தில் கொள்ளை கும்பல் ஒன்று திடீரென துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்தது. அந்த கிராமத்தில் வசித்து வந்த குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள், குழந்தைகள் என 24 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு, அவர்களின் பொருட்களை கொள்ளையடித்து சென்றது.1981-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி நடந்த இந்த சம்பவத்தில், மறுநாள் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அதில், சந்தோஷ் சிங் (சந்தோஷா) மற்றும் ராதே ஷியாம் (ராதே) ஆகியோர் தலைமையிலான கொள்ளை கும்பலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 17 பேர் கொண்ட கும்பலுக்கு எதிராக பல வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின்போது, சந்தோஷ் மற்றும் ராதே உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்து விட்டனர். 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கப்டான் சிங், ராம் பால் மற்றும் ராம் சேவக் ஆகிய அந்த 3 பேரும் குற்றவாளிகள் என உள்ளூர் கோர்ட்டின் சிறப்பு நீதிபதி இந்திரா சிங் நேற்று விசாரணை முடிவில் அறிவித்து உள்ளார். ஒருவர் போலீசில் சிக்காமல் தப்பிவிட்டார். குற்றவாளிகள் 3 பேருக்கான தண்டனை விவரம் வருகிற 18-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த வாஜ்பாய், அந்த குடும்பத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், திகுலியில் இருந்து சாதுப்பூர் நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டார்.

மூலக்கதை