வரி விதிப்பு அச்சம்.. ஆசிய சந்தைகள் தடுமாற்றம்: மூன்றாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை

  தினத்தந்தி
வரி விதிப்பு அச்சம்.. ஆசிய சந்தைகள் தடுமாற்றம்: மூன்றாவது நாளாக சரிந்த இந்திய பங்குச்சந்தை

மும்பை:அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் வெளிநாட்டு வர்த்தக கொள்கைகள் மற்றும் வரி விதிப்பு நடவடிக்கைகளால் வர்த்தக போர் குறித்த கவலை எழுந்தது. இதனால் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில் நிலையற்ற ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்திய சந்தைகளிலும் இதன் தாக்கம் நீடிக்கிறது.மத்திய அரசின் பட்ஜெட் ஓரளவுக்கு சந்தையில் நம்பிக்கையை கொடுப்பதாக இருந்தது. ரெப்போ வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளைக் குறைத்து ரிசர்வ் வங்கியும் சாதகமான உணர்வை கொடுத்தது. எனினும், இந்த இரண்டு அம்சங்களும் சந்தையின் போக்கை மாற்ற முயன்று, அதில் தொடர்ந்து வெற்றி பெற தவறின. இதனால் முதலீட்டாளர்களின் மனநிலை மீண்டும் குழப்ப நிலைக்கு சென்றது. வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் மீளவில்லை. அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பான அச்சம், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட தடுமாற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், மூன்றாவது நாளாக இன்றும் சரிவுடனேயே வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 203.22 புள்ளிகள் சரிந்து, 75,735.96 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 19.75 புள்ளிகள் சரிந்து 22,913.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. முன்னணி நிறுவனங்களான எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவற்றின் பங்குகள் அதிக அளவில் விற்பனை ஆனதும் சந்தை குறியீட்டெண் சரிவிற்கு வழிவகுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் முன்னணி நிறுவனங்களில், எச்.டி.எப்.சி. வங்கி, மாருதி, டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக், ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தன.என்.டி.பி.சி., அதானி போர்ட்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை லாபம் ஈட்டின.நேற்று அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,881.30 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ததாக பரிமாற்றத் தரவுகள் தெரிவிக்கின்றன.ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய சந்தைகள் சரிவுடன் நிலைபெற்றன. ஐரோப்பிய சந்தைகளில் பெரும்பாலும் உயர்வுடன் வர்த்தகம் நடைபெற்றது. நேற்று அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன.சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.08 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 76.10 டாலராக இருந்தது.

மூலக்கதை