3-வது நாளாக ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்வு

மும்பை:ரிலையன்ஸ், ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றின் பங்குகளின் கொள்முதல் அதிகரித்ததால், இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக இன்று ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 226.85 புள்ளிகள் உயர்ந்து 76,759.81 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 429.92 உயர்ந்து 76,962.88 புள்ளிகள் வரை சென்றது.இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 86.40 உயர்ந்து 23,249.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 முன்னணி நிறுவனங்களில், பாரதி ஏர்டெல், பவர் கிரிட், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்லே, மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் எச்டிஎப்சி வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.டிசம்பரில் முடிவடைந்த காலாண்டில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.4,308 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்கு கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனம் மற்றும் வணிக வாகன பிரிவுகளின் வருவாய் சரிந்தது. இதனால் டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் அந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 22 சதவீதம் சரிந்து ரூ.5,578 கோடியாக இருந்தது. இந்த சரிவினால் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 7 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. ஐடிசி ஓட்டல், பஜாஜ் பின்சர்வ், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, சொமாட்டோ மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை பின்தங்கின. ஆசிய சந்தைகளில், டோக்கியோ ஏற்றத்துடன் நிலைபெற்றது. சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சந்தைகள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருந்தன. ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றம் பெற்றன. அமெரிக்க சந்தைகள் புதன்கிழமை சரிவுடன் முடிவடைந்தன.வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.2,586.43 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ததாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.உலகளாவிய சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.43 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 76.25 டாலராக இருந்தது.
மூலக்கதை
