இலங்கைக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை - வங்காள விரிகுடாவில் வலுப்பெறும் காற்றழுத்தம்! - லங்காசிறி நியூஸ்
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 25 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் மட்டக்களப்புக்கு 290 கிலோமீற்றர் மற்றும் திருகோணமலைக்கு 410 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு மிக அருகில் நகரக்கூடும். தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தீவின் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். தீவின் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (25) ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மத்திய-தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 530 கிலோமீற்றர் தொலைவில் இந்த அமைப்பு நிலைகொண்டது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவின் கிழக்கு கடற்கரையை நெருங்கி ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்படுகிறது. காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்பதால், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.நவம்பர் 24 ஆம் திகதி முதல், மறு அறிவித்தல் வரும் வரை, நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் நவம்பர் 27ஆம் திகதி வரையான காலநிலை சீரற்ற காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.பொதுமக்கள் அவசர உதவிக்காக உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறும் இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.