சீனா, அமெரிக்காவுக்கு இந்தோனீசிய அதிபர் பயணம்
ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அதிகாரபூர்வமாக பயணம் மேற்கொள்ளவுள்ளார்.அதிபராக பதவியேற்ற சில நாள்களிலேயே அவர் அடுத்தடுத்து அதிகாரத்துவ பயணங்களுக்குத் தயாராகியுள்ளார். முன்னாள் தற்காப்பு அமைச்சரான பிரபோவோ பிரேசில், பெரு, பிரிட்டன், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளதாக கொம்பாஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. முதலில் பிரபோவோ சீனாவுக்கு செல்வார் என்றும் அதன் பிறகு அமெரிக்கா செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பெருவில் நவம்பர் மாதம் 14, 15 தேதிகளில் ஆசிய பசிபிக் பொருளியல் ஒற்றுமை மாநாடு நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்ட பிறகு பிரபோவோ,பிரேசிலில் நவம்பர் 18,19 தேதிகளில் நடக்கும் G20 மாநாட்டில் கலந்துகொள்வார் அதன்பின்னர் அவர் பிரிட்டன் செல்வார். உலக அளவில் தமது அரசியல் பலத்தைக் காட்டவும் நாடுகளுடன் இணைக்கமாக செயல்படவும் பிரபோவோ எண்ணியுள்ளதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். பிரபோவோ கடந்த 20ஆம் தேதி அதிபராக பொறுப்பேற்றார். சில மாதங்களுக்கு முன்னர் அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பிறகு பிரபோவோ ஜப்பான், ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகளுக்குச் சென்றார்.
மூலக்கதை
