மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து

தினமலர்  தினமலர்
மீண்டும் இணைந்த இந்தியன் 2 குழு : மாறி மாறி வாழ்த்து

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். அந்நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் ஏற்கெனவே ரஜினிகாந்த் நடிக்க '2.0' படத்தைத் தயாரித்திருந்தார். அந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டித் தரவில்லை. இருப்பினும் மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க 'இந்தியன் 2' படத்தை 2019ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பித்தார்கள். 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் மூவர் மரணமடைந்தனர். அதற்கு அடுத்த மாதமே கொரோனா வந்துவிட்டதால் படப்பிடிப்பு நின்றது.

அதன் பின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்ற நிலையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குனர் ஷங்கர் மீது நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்க ஷங்கர் சென்றதே அதற்குக் காரணம். பின்னர்தான் லைக்கா நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை என்ற விஷயம் வெளியில் தெரிந்தது. லைக்கா நிறுவனம் மீதும் ஷங்கர் குற்றம் சாட்டினார். ஷங்கர் வேறு படங்களை இயக்கத் தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் படத்தில் ஷங்கர் பிஸியாகவே இருந்தார்.

'இந்தியன் 2' மீண்டும் ஆரம்பமாகுமா, ஆகாதா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து 'இந்தியன் 2' படத்திற்கு உயிர் கொடுக்க ஆரம்பித்தனர். படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் வேலைகள் பரபரப்பாக நடக்க ஆரம்பித்தன. தற்போது சென்னையில் படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி உள்ளன.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள வாழ்த்தில், “இந்தியன்' என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு இயக்குனர் ஷங்கர், “நிச்சயமாக 'இந்தியரே'. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது, உங்கள் வாழ்த்து மிக்க நன்றி கமல்ஹாசன் சார்,” என பதிலளித்துள்ளார்.

மேலும், இயக்குனர் ஷங்கருக்கு, 'இந்தியன் 2' படத் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனமும், “தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஒரு அற்புதமான ஆண்டாகா, உங்கள் பார்வையால் எங்களை ஊக்கப்படுத்துங்கள்,” என வாழ்த்து தெரிவித்துள்ளது.

ஒரு சிலருடைய வாழ்த்துகளுக்கு பதிலுக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனர் ஷங்கர் இன்னும் லைக்கா நிறுவனத்திற்கு பதிலளிக்கவில்லை. இருப்பினும் தங்கள் பிரச்சினைகளை மறந்து 'இந்தியன் 2' படத்தில் மீண்டும் இணைய உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு முன்பாக, இந்த வாழ்த்துகளின் மூலம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

மூலக்கதை