நீட், புதிய கல்வி கொள்கை, மின்சாரம் காவிரி, மேகதாது பிரச்னை பற்றி மீண்டும் பிரதமரிடம் பேசுவேன்: டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தினகரன்  தினகரன்
நீட், புதிய கல்வி கொள்கை, மின்சாரம் காவிரி, மேகதாது பிரச்னை பற்றி மீண்டும் பிரதமரிடம் பேசுவேன்: டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

புதுடெல்லி: நீட் பிரச்னை, புதிய கல்வி கொள்கை, மின்சாரம், காவிரி, மேகதாது பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை மீண்டும் நினைவுபடுத்த இருப்பதாக டெல்லியில் பிரதமரை சந்திப்பதற்கு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நேற்று (நேற்று முன்தினம்) இரவு டெல்லிக்கு வந்த நான் இன்று (நேற்று) காலையில் குடியரசு தலைவரையும், குடியரசு துணைத்தலைவரையும் நேரில் சென்று சந்தித்தேன். என்னுடைய நல்வாழ்த்துகளை அவர்களுக்கு தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன். குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவர் ஆகியோரின் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு வந்திருந்தது, ஆனால் என்னால் வர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும், இன்றைக்கு நான் நேரடியாக நேரம் கேட்டு அவர்களை சென்று சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து வந்திருக்கிறேன். இரண்டு பேரும் என்னிடத்தில் மகிழ்ச்சியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள், ஆட்சியினுடைய சிறப்புகளை பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். எனவே என்னை பொறுத்தவரை, இந்த சந்திப்பு மன நிறைவாக இருந்தது.தொடர்ந்து, இன்று (நேற்று) மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்க இருக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்றால், 180க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த செஸ் வீரர்கள் கலந்துகொண்ட 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடந்தது. இந்த போட்டியை தொடங்கி வைக்க வேண்டும் என்று நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பிரதமர் நேரடியாக சென்னைக்கே வந்து அதை தொடங்கி வைத்தார். அதேபோல, அந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழை நேரடியாக நான் வந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்திக் கொண்டேன். அதனால் நான் நேரடியாக வந்து அழைப்பிதழை தர முடியாத சூழ்நிலை இருந்ததால், நான் தொலைபேசியில் அந்த செய்தியை சொன்னதற்கு பிறகு அவரே நேரடியாக வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். போட்டியை தொடங்கி வைத்த அவருக்கு நன்றி சொல்லிவிட்டு செல்வதற்காகத்தான் இன்றைக்கு நேரடியாக வந்து நன்றி சொல்வதற்காக சந்தித்து இருக்கிறேன். நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளையெல்லாம் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த கோரிக்கைகளை ஓரளவு நிறைவேற்றக்கூடிய சூழ்நிலை இருந்தாலும், இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆகவே, அதையும் நினைவூட்டி அந்த கோரிக்கையையும் நேரடியாக சந்திக்கிறபோது எடுத்து வைக்க இருக்கிறேன். இன்று (நேற்று) இரவே நான் சென்னை திரும்ப இருக்கிறேன்.* என்னென்ன கோரிக்கைகளை பிரதமரிடத்தில் கொடுக்க இருக்கிறீர்கள்?ஏற்கனவே சொன்ன நீட் பிரச்னை, புதிய கல்வி கொள்கை, மின்சாரம், காவிரி பிரச்னை, மேகதாது பிரச்னை போன்ற பல கோரிக்கைகளை தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் மீண்டும் நினைவுபடுத்துவோம்.குடியரசு தலைவரை பார்த்துக்கூட நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறீர்களா? ஏற்கனவே இருந்த குடியரசு தலைவரிடம் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறோம். அதேமாதிரி, பிரதமரிடத்திலும் தொடர்ந்து வைத்திருக்கிறோம், இன்றைக்கும் வைக்க இருக்கிறோம். ஆனால், புதிதாக அவர் இப்போதுதான் பொறுப்பேற்றிருப்பதால் எந்த கோரிக்கையும் குடியரசு தலைவரிடம் வைக்கவில்லை. மரியாதை சந்திப்பு தான், வாழ்த்து சொல்லத்தான் வந்தேன். செஸ் ஒலிம்பியாட் போட்டியை நல்லமுறையில் நடத்தியதற்காக குடியரசு தலைவர் உங்களுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், உங்களுக்கு காலை உணவு கொடுத்ததாகவும். எப்போதுமே குடியரசு தலைவரை ஒரு முதலமைச்சர் சந்திக்க வந்தார் என்றால் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான், அதற்காக கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை