150 பாரம்பரிய இடங்களில் நிரந்தரமாக தேசியக் கொடி: தொல்லியல் துறை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
150 பாரம்பரிய இடங்களில் நிரந்தரமாக தேசியக் கொடி: தொல்லியல் துறை அறிவிப்பு

புதுடெல்லி: ‘இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 150 பாரம்பரிய நினைவு சின்ன இடங்களில் சுதந்திர தினத்துக்காக ஏற்றப்பட்ட தேசியக்கொடி, நிரந்தரமாக பறக்க விடப்படும்,’ என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 3,698 பாரம்பரிய நினைவு சின்னங்கள் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் 75வது சுதந்திர தின அமிர்த பெருவிழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள இந்த பாரம்பரிய நினைவு சின்னங்களை ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்வையிடலாம் என ஒன்றிய கலாசார அமைச்சகம் அறிவித்தது.இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தின நிறைவை முன்னிட்டு, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நினைவு இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இவற்றில் 150 பாரம்பரிய நினைவு சின்ன இடங்களில் விளக்குடன் கூடிய கொடிக் கம்பங்களில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி நிரந்தரமாக பறக்க விடப்படும் என்று தொல்லியல் துறை நேற்று அறிவித்தது. ‘அதே நேரம், விளக்கு இல்லாத கொடிக் கம்பங்களில் ஏற்றப்பட்ட மூவர்ணக் கொடியானது, தேசியக்கொடி விதிகளின்படி இருட்டில் பறக்க விடக் கூடாது என்பதால், ஒவ்வொரு நாளும் மாலை இறக்கப்பட்டு மறுநாள் காலை மீண்டும் ஏற்றப்படும்,’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை